News Just In

7/16/2026 01:37:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய உத்தேசம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய உத்தேசம்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலக திட்டமிடல் பிரதி பணிப்பாளர் ரி. நிர்மலராஜ் தெரிவித்தார்.

அதன்படி பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அமைந்த ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இதில்;, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு உட்பட துறைசார்ந்த திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் அதிகாரிகள் பங்குபற்றினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அடையாளம் காணப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்கள், அவற்றுக்காக அமைச்சு, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றுக்கு அபிவிருத்தி செய்வதற்கு வரையப்பட்ட முன்மொழிவுகள், அவற்றுக்கு அவசியமான நிதி ஒதுக்கீடுகள், இந்தத் திட்டங்கள் நிறைவடைந்த பின்னரான செயல்பாடு, பராமரிப்புக்கான ஏற்பாடுகள், அது தொடர்பாக ஒத்துழைப்பு வழங்கக்கூடிய நிறுவனங்களின் அனுமதி பெறுதல், சுற்றுலா நாட்காட்டி, என்பன தொடர்பாக மாவட்டத்தின் சுற்றுலாப் பிரிவிற்கு பொறுப்பான மாவட்ட செயலக திட்டமிடல் பிரதி பணிப்பாளர் ரி. நிர்மலராஜ் தெளிபடுத்தினார்.

அதனடிப்படையில், தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் புனர்நிருமாணம், வாவி நுழைவாயில் வீதிகளின் நிருமாணம், வடிகாலமைப்பு வசதி அமைத்தல், ஏத்தாலைக் குளத்தில் பறவைகளைப் பார்வையிடும் பகுதி, பசுமை சுற்றுலா செயற்பாடுகளை நிறுவுதல், மண்முனை வாவி, மண்முனை பாலத்தை அழகுப்படுத்தல், படகு வசதிகளை மீளமைத்தலுடன் அதனை அண்மித்த பகுதிகளை புனர்நிருமாணம் செய்தல், ஆகிய விடயங்கள் தொடர்பாக விரிவாகவும் ஆராயப்பட்டது.

சுற்றுலா தொடர்பான இணையத் தளம் ஒன்றை ஆரம்பிப்பதுடன், முதன்மை செயற்பாட்டுத் திட்டமாக மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட, மக்கள் அதிகம் பொழுது போக்கு இடங்களுக்கான சுகாதார வசதிகள் தொடர்பாக துறை சார்ந்த திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள், நிறுவனங்களின் அதிகாரிகள் அது தொடர்பான அபிப்பிராயங்களை முன் வைத்தனர்.

இதேவேளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையை பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொக்கட்டிச்சோலை ஆலயப் பகுதி சமய சுற்றுலாவிற்கான அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பல தடவை அங்கு விஜயம் செய்து, அதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதான தகவலை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரிப்கா சபீன் தெளிவுபடுத்தினார்.


No comments: