நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்குமிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) பிற்பகல் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோதலில் சிக்கி இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 கைதிகள் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் கடுமையான காயங்களுக்குள்ளான இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலையிலிருந்த கைதிகள் குழுவொன்று கூரையின் மீது ஏறி எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அதிலிருந்து கீழே விழுந்ததில் மேலும் நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த கைதிகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கமலத்கே, சுமார் 10 கைதிகளுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டதுடன், சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்டு, அதிகாரிகள் தங்களுக்குத் சரியான தகவல்களை வழங்கவில்லை எனக் கூறி பதற்றமாக நடந்துகொண்டனர்.
எனினும், பொலிஸார் தலையிட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகள் பற்றிய தகவல்களை அவர்களுக்கு வழங்கியதோடு, உறவினர்கள் சிலரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்தனர்.
இச்சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் சிகிச்சை பெற்று பல்லன்சேன முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் மொத்தம் 2,417 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சிறைச்சாலையின் உள்சூழ்நிலை சிறைச்சாலை அதிகாரிகளினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், சிறைச்சாலையின் வெளிப்பாதுகாப்பிற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இது கைதிகளுக்கு இடையிலான ஒரு மோதல் மாத்திரமே தவிர, இதில் அதிகாரிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, கைதிகளின் உறவினர்கள் இந்த நேரத்தில் வீண் பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இச்சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கைதிகளின் ஒத்துழைப்புடன் சிறைச்சாலையின் உள்நிலவரத்தை சுமுக நிலைக்குக் கொண்டுவர முடிந்தது. கைதிகள் தங்களது சில கோரிக்கைகளை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் முன்வைத்துள்ளதுடன், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் அந்த இடத்திலேயே கைதிகளுக்குத் தெரிவித்துள்ளார்
No comments: