News Just In

7/06/2026 03:20:00 PM

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள்!

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள்



நீர்கொழும்பு சிறைக்குள் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நிலையைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட விமானப்படை ஆளில்லா விமானம் (ட்ரோன்) சிறைக்கு உள்ளிருந்தே சுடப்பட்டுள்ளது.

சிறைக்குள் நிலைமையைக் கட்டுப்படுத்த விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், மேற்கு மாகாண வடக்குப் பொறுப்பு பிரதிப் காவல்துறைமா அதிபர் கலிங்க ஜெயசிங்க மற்றும் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் எரிக் பெரேரா ஆகியோர் நீர்கொழும்பு சிறைச்சாலை பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06-07-2026) காலை ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்பதில் விசேட அதிரடிப்படையினரும் மற்றும் இராணுவத்தினரும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்

எனினும் காயமடைந்த கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்பதில் கடும் சிரமத்தையும் எதிர்ப்புகளையும் அதிகாரிகள் எதிர்கொண்டுள்ளனர்.

இன்று காலை தொடக்கம் நண்பகல் தாண்டிய நிலையிலும் சிறைச்சாலைக் கைதிகளில் ஒரு பிரிவினர் தொடர்ந்தும் தீவிர மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் அதேவேளை அவர்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி பல்வேறு தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டபோதும் அது பலனளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

மோதலில் ஈடுபட்டுள்ள கைதிகள் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை இலக்கு வைத்து கடுமையான தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.



பதிலுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கைதிகள் மீது பதிலடித் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையே காயமடைந்த நிலையில் இன்னும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலர் கைதிகளினால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை மீட்க விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே கைதிகளின் மோதல் குறித்த செய்திகள் வெளியானவுடன் அவர்களின் உறவினர்கள் பெருமளவில் சிறைச்சாலை முன்பாக ஒன்றுதிரண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி சிறைச்சாலைகள் ஆணையரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க, இன்று காலை நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நிகழ்ந்த மோதல் தொடர்பாக ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நேற்று (05-07-2026) கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இன்று காலை (06-07-2026) அவர் கைதிகளுக்கு உணவு வழங்கச் சென்றபோது மீண்டும் கைதிகளுக்கு இடையே மோதல் வெடித்ததாக சிறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற போது கைதிகள் சிறை அதிகாரிகளைத் தாக்கினர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: