அதிகளவில் பதிவு செய்து கொண்டு வெளிநாட்டுக்கு சென்றுள்ள தொழிலாளர்களைக் கொண்ட மாகாணமாக கிழக்கு மாகாணம் விளங்குகிறது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால், வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய முகாமையாளர் திலக் விஸ்வகுலதிலக தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பதிகாரி ரோகினி ஹெட்டியாரச்சி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் இலங்கைப் பிரஜைகளின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் நாடளாவிய ரீதியில் இவ்வாறு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு நாடு முழுவதும் 2,800 மாணவர்கள் புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில், அதிகளவில் பதிவு செய்து கொண்டு வெளிநாட்டுக்கு சென்றுள்ள தொழிலாளர்களைக் கொண்ட மாகாணமாக கிழக்கு மாகாணம் விளங்குகிறது.
இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 321 மாணவர்கள் புலமைப்பரிசில்களைப் பெற தகுதி பெற்றுள்ளனர்.
புலமைப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி தலைவியும் மாநகர சபை உறுப்பினருமான வனிதா செல்லப்பெருமாள், மண்முனை வடக்கு கிராம நிர்வாக உத்தியோகத்தர் கே. ராஜன், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் கே. ரமணபிரசாத், மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments: