News Just In

7/21/2026 02:07:00 PM

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சையும் புனர்வாழ்வும் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சையும் புனர்வாழ்வும் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

போதைப்பொருட்களைப் பாவித்து அதற்கு அடிமையானவர்களுக்கான மூன்றாவது கட்ட சிகிச்சையும் புனர்வாழ்வுப் பயிற்சிகளும் மட்டக்களப்பு - கல்லடியில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இயங்கி வரும் குறுகிய கால புனர்வாழ்வு நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மொழி மூலம் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சையும் புனர்வாழ்வுச் சேவைகளையும் வழங்கும் முதல் நிலையமாக மட்டக்களப்பு - கல்லடி புனர்வாழ்வு நிலையம் விளங்குவதுடன், தொடர்ச்சியாக மூன்றாவது கட்ட பயிற்சிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் புனர்வாழ்வுச் சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் நிலையப் பொறுப்பதிகாரியுமான பி. தினேஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் துசார முத்துகல கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மனநல வைத்திய நிபுணர் ஆர். கமல்ராஜ், பிராந்திய மனநல வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். டான் சௌந்தரராஜா, சுகாதார அதிகாரியும் மனநல சிகிச்சையாளருமான வைத்தியர் அனுசியா சிறீசங்கர், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புனர்வாழ்வு பெறும் சேவைநாடிகளை மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்குத் தேவையான உளவியல் ஆலோசனை, வாழ்க்கைத்திறன் மேம்பாடு, ஒழுக்கப் பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இந்நிலையத்தில் வழங்கப்படுகின்றன. மேலும், போதைப்பொருள் தொடர்பான தகவல்களையும் முறைப்பாடுகளையும் 1927 என்ற தேசிய உதவி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என்பதும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது
.

No comments: