News Just In

7/14/2026 12:18:00 PM

முப்பது இலட்சம் பேர் பயனடையும் அக்ரஹார; புதுப்பிக்கும் கால அவகாசம் 31 உடன் முடிவு

முப்பது இலட்சம் பேர் பயனடையும் அக்ரஹார; புதுப்பிக்கும் கால அவகாசம் 31 உடன் முடிவு


அக்ரஹார காப்புறுதி தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதற்காக அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக, தேசிய காப்புறுதி நிதியத்தின் தலைவர் டாக்டர் விஷாகா வனசிங்க தெரிவித்துள்ளார்.இதனைக் கருத்திற்கொண்டு இதுவரை தமது தகவல்களைப் புதுப்பிக்காத பயனாளர்கள் உடனடியாக அதனை நிறைவு செய்யுமாறும் அவர் கேட்டுள்ளார்.

மத்திய மற்றும் மாகாண அரச சேவைகளில் ஓய்வூதிய உரித்துயுடைய சுமார் 09 இலட்சம் ஊழியர்கள் அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் நேரடி பயனாளர்களாக உள்ளனர்.இதற்கு மேலதிகமாக அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இணைந்ததாக சுமார் 30 இலட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் நன்மை பெற்று வருகின்றனர்.

அக்ரஹார தரவுத்தளத்தை புதுப்பிக்கும் நடவடிக்கை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.இந்நிலையில் இதுவரை சுமார் 06 இலட்சம் அரச ஊழியர்கள் தங்களது தகவல்களைப் புதுப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள சுமார் 1,900 அரச நிறுவனங்களில் அக்ரஹார திட்டத்தின் உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால், ஒவ்வொரு நிறுவனத்திலும் அக்ரஹார ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமிக்காத நிறுவனங்களும் விரைவில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், இத்தரவுத்தளத்தில் பதிவேற்றப்படும் தகவல்களின் துல்லியத்தை சம்பந்தப்பட்ட அக்ரஹார ஒருங்கிணைப்பு அதிகாரியும் நிறுவனத் தலைவரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலமே தரவுத்தளத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் அக்ரஹார காப்புறுதி நன்மைகள் இந்தப் புதுப்பிக்கப்பட்ட தரவுத்தளத்தின் ஊடாக மட்டுமே வழங்கப்படவுள்ளன.இதனைக் கவனத்திற் கொண்டு அனைத்து அரச நிறுவனங்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் தேசிய காப்புறுதி நிதியத்தின் தலைவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்

No comments: