News Just In

5/18/2026 12:00:00 PM

எழுத்தாளரும் வைத்திய அதிகாரியுமான ஜலீலா முஸம்மில் எழுதிய ஹைக்கூ கவிதை நூல் இந்தியாவில் வெளியிட்டு வைப்பு

எழுத்தாளரும் வைத்திய அதிகாரியுமான ஜலீலா முஸம்மில் எழுதிய ஹைக்கூ கவிதை நூல் இந்தியாவில் வெளியிட்டு வைப்பு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

இலக்கியத்துறைக்கான கிழக்கு மாகாண பண்பாட்டல்களில் அமைச்சின் “இளம் கலைஞர் விருது” பெற்ற பன்னூலாசிரியரும் மட்டக்களப்பு - ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுமான டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய “ஒரு குடம் கானல் நீர்” எனும் ஹைக்கூ கவிதை நூல் இந்தியாவின் தமிழ்நாட்டில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று 17.05.2026 புதுக்கோட்டை தமிழ் சங்கத்தில் ஹைக்கூ பெருவிழாவாக கொண்டாடப்பட்ட தமிழ் ஹைக்கூ ஐந்தாவது உலக மாநாட்டில் இந்நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மலேசியா, சிங்கப்பூர், துபாய், அந்தமான், இலங்கை போன்ற உலக நாடுகளில் இருந்தும் மற்றும் இந்தியாவின் கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் வந்த தமிழ் இலக்கிய பிரபலங்களும், ஆர்வலர்களும், படைப்பாளிகளும், எழுத்தாளர்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் ஹைக்கூ கருத்தரங்கம், கவியரங்கம், ஹைக்கூ பகிர்வரங்கம், ஹைக்கூ நூல்கள் வெளியீடு என்பன இடம்பெற்றன.

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் தமிழ் இலக்கியத்துறைக்கான “இளம் கலைஞர் விருது-2022” வழங்கி கௌரவிக்கப்பட்ட வைத்திய அதிகாரி ஜலீலா முஸம்மில் இதுவரை சுமார் 40இற்கு மேற்பட்ட இலங்கை இந்திய இதழ்களில் சஞ்சிகைகளில் தொடர்ச்சியாக தமது மருத்துவ, இலக்கிய ஆக்கங்களை படைத்து வருவது அவருடைய திறமைக்கான எடுத்துக்காட்டாகும்.

இவரது ஆக்கங்கள் இலங்கை, இந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் வெளிவந்தமை மட்டுமல்லாமல் பன்னூலாசிரியராகவும் இவர் திகழ்கிறார். அதேவேளை இவர் தனது இலக்கிய, மருத்துவ படைப்பாக்கங்களுக்காக பல்வேறுபட்ட விருதுகளையும் சான்றிதழ்களையும் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பெற்றுள்ளார்.

இவரது “சிறகு முளைத்த மீன்" எனும் முதற்கவிதை நூல் தமிழ்நாடு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எழிலினிப் பதிப்பகத்தால் வெளியிட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டொக்டர் ஜலீலாவின் "தூரிகை வரை மின்மினிகள்" ஹைக்கூ கவிதை நூல், "மஞ்சள் மாம்பூ"ஹைக்கூ கவிதை நூல் “ஓட்டகச் சிவிங்கி பொம்மை” மழலைப் பாடல்கள் நூல் ஆகியவை ஏற்கெனவே வெளியிட்டு வைக்கப்பட்டன.

அத்துடன் இந்தியா தமிழ்நாடு தமிழ்த் தொண்டன் பைந்தமிழ்ச் சங்கமும் நிலா வட்டம் இலக்கிய அமைப்பும் சேர்ந்து ஒன்றிணைந்து உலக சாதனையாக (GROUP OF WORLD RECORD) கவித்தேனருவி , கவித்தேன் தூளி என்ற இரண்டு உலக சாதனை நூல்களிலும் டொக்டர் ஜலீலாவின் இரண்டு நூல்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

கவித்தேனருவியில் பத்தாயிரம் கவிதைகள் கொண்ட தொகுப்பில் இவரது 100 கவிதைகளும், கவித்தேன் தூளி ஐந்தாயிரம் மழலைப் பாடல்கள் தொகுப்பில் (நூறு கவிஞர்கள் தலா ஐம்பது மழலைப் பாடல்கள்) இவரது 50 மடலை பாடல்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

No comments: