ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிஅமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்ததாக ஈரானிய அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், கமேனிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வாரிசு எவரும் இல்லாத நிலையில், அடுத்த உச்சத் தலைவர் யார் என்பது தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பு 88 சிரேஷ்ட மதத்தலைவர்களை கொண்ட “நிபுணர்கள் சபை” எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பிற்கு உள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி, குறித்த பதவிக்கு சாத்தியமான போட்டியாளர்களாக ஐவரின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
மொஜ்தபா கமேனி (56)
உச்சத் தலைவர் கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா, அதிகார வட்டாரங்களில் முக்கிய செல்வாக்கு கொண்டவராகக் கருதப்படுகிறார். இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் அதன் பசீஜ் தன்னார்வ படையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என அறியப்படுகிறார்.
இருப்பினும், தந்தையிடமிருந்து மகனுக்கு பதவி மாற்றம் என்பது ஷியா மதகுரு அமைப்பில் எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. மேலும், அவர் உயர்நிலை மதகுருவாக இல்லாததும், ஆட்சியில் அதிகாரப்பூர்வ பதவி வகிக்காததும் அவருக்கு சவாலாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

t
அலிரேசா அரஃபி (67)
அரஃபி ஒரு நிலைபெற்ற மதகுருவாகவும், கமேனியின் நெருங்கிய நம்பிக்கையாளர் எனவும் அறியப்படுகிறார். தற்போது நிபுணர்கள் சபை அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.
தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் சட்டங்களை பரிசீலிக்கும் பாதுகாவலர் சபையின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், ஈரானின் மதபயிற்சி மையங்களின் தலைவராக உள்ளார். அரசியல் ரீதியாக வலுவானவராக கருதப்படாத இவர், பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இல்லாதவர் என கூறப்படுகிறது.

மொஹம்மது மெஹ்தி மிர்பாகேரி (60)
கடும்போக்கு வாதங்களை கொண்ட மதகுருவாக அறியப்படும் மிர்பாகேரி, நிபுணர்கள் சபை உறுப்பினராக உள்ளார். மத அமைப்பின் மிகக் கடுமையான அணியை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என பார்க்கப்படுகிறார்.
மேற்கத்திய நாடுகளுக்கு கடுமையாக எதிர்ப்பாளராகவும், விசுவாசிகள் மற்றும் அந்நிய மதத்தினர் இடையேயான மோதல் தவிர்க்க முடியாதது என நம்புபவராகவும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது கும் நகரில் உள்ள இஸ்லாமிய அறிவியல் கல்விமையத்தின் தலைவராக உள்ளார்.

ஹசன் கொமேனி (50)
ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் அயத்துல்லா ருஹொல்லா கொமேனியின் பேரனான ஹசன் கொமேனி, மத மற்றும் புரட்சிசார் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றவராகக் கருதப்படுகிறார்.
கொமேனி நினைவிடம் பராமரிப்பாளராக உள்ளார். இருப்பினும், அவர் அரசியல் பதவிகளில் ஈடுபட்டதில்லை; பாதுகாப்பு அமைப்புகள் அல்லது ஆட்சித் தலைமை வட்டாரங்களில் பெரும் செல்வாக்கு கொண்டவர் இல்லை எனவும் மற்றவர்களை விடவும் மிதமான நிலைப்பாட்டைக் கொண்டவராகப் பார்க்கப்படுகிறார்.

ஹாஷெம் ஹொசைனி புஷெஹ்ரி (60களின் இறுதி)
நிபுணர்கள் சபை அமைப்பின் முதல் துணைத் தலைவராக உள்ள மூத்த மதகுருவான புஷெஹ்ரி, பதவி மாற்ற செயல்முறையை நிர்வகிக்கும் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
கமேனிக்கு நெருக்கமானவர் என அறியப்பட்டாலும், உள்ளக அரசியலில் தாழ்ந்த வெளிப்பாடு கொண்டவர். IRGC உடன் வலுவான தொடர்பு அற்றவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈரானின் அரசியல் மற்றும் மத அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கும் நிபுணர்கள் சபை, அடுத்த உச்சத் தலைவரைத் தேர்வு செய்யும் வரை அதிகார அமைப்பில் நிச்சயமற்ற நிலை தொடரலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் சமநிலைகள், பாதுகாப்பு அமைப்புகளின் ஆதரவு மற்றும் மதஅமைப்பின் ஒப்புதல் ஆகியவை இறுதி முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.
No comments: