மலையகத்தில் 3,000 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!

நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தினால், மலையக மாணவர்களின் இலவச கல்வி உரிமை பாதிக்கப்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வேலு இந்திரச்செல்வன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
50-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 1,500 பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 3,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தற்போது மாணவர்கள் 3 கிலோமீற்றர் சுற்றளவிற்குள் கல்வி கற்கும் வகையில் பாடசாலைகள் அமைந்துள்ளன. எனினும், புதிய சுற்றுநிரூபத்தின் ஊடாக இந்தத் தூரத்தை 5 கிலோமீற்றராக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு திட்டமிட்ட செயல், முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மலையக மாணவர்கள் மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
மலையக மாணவர்களின் முன்னேற்றத்திற்கு கல்வி மட்டுமே ஒரே வழி என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, அரசாங்கம் சமத்துவமான கல்வி என்றுக் கூறினாலும் இதுவரை சமத்துவமான பாடசாலைகள் உருவாக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments: