
கொழும்புவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புத்தரின் நினைவுச் சின்னங்கள்.
குஜராத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்கள் வரும் 11-ம் தேதி வரை இலங்கையில் நடைபெறும் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளன.
1957-ல் குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள தேவினிமோரி என்ற தொல்பொருள் தளத்தில், பேராசிரியர் எஸ்.என்.சௌத்ரி தலைமையிலான குழு, புத்தரின் நினைவு சின்னங்களான பேழை, செப்புப்பெட்டி, பாட்டில் ஆகியவற்றை கண்டெடுத்தது. தேவினிமோரியில் கண்டெடுக்கப்பட்டதால் இவை தேவினிமோரி நினைவுச் சின்னங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தப் பேழையானது பச்சை நிறக் கல்லால் ஆனது. அதில், பிராமி மற்றும் சம்ஸ்கிருத மொழியில் புத்தர் பற்றிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. செப்புப் பெட்டி பட்டுத் துணியால் சுற்றப்பட்ட, புனித சாம்பல் மற்றும் மணிகளைக் கொண்டுள்ளது. தங்கம் பூசப்பட்ட பாட்டில், புனித சாம்பல், கரிமப் பொருட்கள், களிமண் ஆகியவையும் உள்ளன.
இவை, வதோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி கடந்த ஆண்டு இலங்கை பயணம் மேற்கொண்டார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மிக மற்றும் கலாசார உறவுகள் வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி, வரும் 11-ம் தேதி வரை இலங்கையில் தேவினிமோரி நினைவுச் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
புத்தரின் நினைவுச் சின்னங்கள் இலங்கை தலைநகரம் கொழும்புவில் உள்ள கங்காராமய புத்த மடாலயத்தில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புனித சின்னங்கள் கங்காராமய புத்த மடாலயத்துக்கு நேற்று வந்தபோது, மடாலய தலைமை குரு கிரிந்தே அஸ்ஸாஜி, இலங்கை சுகாதார த்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆகியோர் வரவேற்றனர்.
இந்த நிகழ்வையொட்டி குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் மற்றும் குஜராத் துணை முதல்வர் ஸ்ரீஹர்ஷ் சங்கவி ஆகியோரும் இலங்கைக்கு செல்ல உள்ளனர். இந்தக் கண்காட்சி ஆன்மிக நிகழ்வாக மட்டுமன்றி, இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஆழமான பண்பாடு மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
முன்னதாக தாய்லாந்து, மங்கோலியா, வியட்நாம் மற்றும் பூடான் நாடுகளிலும் புத்தரின் நினைவுச் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, லட்சக்கணக்கானோர் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.
No comments: