News Just In

1/26/2026 06:02:00 AM

பறிபோகும் சிறீதரனின் பதவி! தமிழரசுக் கட்சியின் தீர்மானம்!

பறிபோகும் சிறீதரனின் பதவி! தமிழரசுக் கட்சியின்  தீர்மானம்..



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் பணிப்பை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தால், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை அவரிடமிருந்து மீளப் பெற கட்சி தீர்மானித்துள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று(25) பிற்பகல் மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுமந்திரன், "சிறீதரனுக்கு நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியானது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவினாலேயே வழங்கப்பட்டது.

தேர்தல் முடிந்த பின்னர் வவுனியாவில் அரசியல் குழுவின் கூட்டத்தில் அந்த நேரத்தில் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டார்.

அந்த நேரத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்துக்கு வழங்குவதற்கும் அந்த அரசியல் குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.

அதேபோன்று நாடாளுமன்றத்தில் கொறடா பதவியை வைத்தியர் சத்தியலிங்கத்துக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டதுடன் நாடாளுமன்ற நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனையும் நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்ற குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நாங்கள் நியமித்தோம். நேற்று(24)திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில் இவை பற்றி ஆராயப்பட்டன. அரசியல் குழுவினால் நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றுவதற்கான அதிகாரம் அரசியல் குழுவுக்கே இருக்கின்றது.

எந்தக் குழு நியமித்ததோ அதனை மாற்றுவதற்கு அதிகாரம் அந்தக் குழுவுக்கு உண்டு. தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணத்தால் அரசியல் குழுவினால் வழங்கப்பட்ட நியமனத்தை மீளப்பெறுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அரசியல் குழு அவர் மீது நம்பிக்கை வைத்து ஏகமனதாக நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை அவருக்கு வழங்கியது. அதே அரசியல் குழு இரண்டு தடவைகள் அவர் அரசமைப்புக் கவுன்ஸிலிலிருந்து இராஜிநாமாச் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை ஏகமனதாக வழங்கியிருந்தது.

நேற்றைய தினம் சுமார் நான்கு மணி நேரம் அதே கருத்தை அவரிடம் வலியுறுத்தியிருந்தோம்.

ஆகவே கட்சியின் எந்த உயர் குழு அவருக்கு அந்தப் பதவியை வழங்கியதோ, அந்தக் குழுவின் ஆலோசனையையும் வற்புறுத்தலையும் அவர் செவிமடுக்கவில்லையென்றால் அந்தப் பதவியை அவரிடமிருந்து எடுப்பது எனத் தீர்மானித்தோம் என தெரிவித்துள்ளார்.

No comments: