News Just In

1/03/2026 10:06:00 AM

பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளை பின்பற்றுவது, பிறரை மதிப்பது, வன்முறை மற்றும் தவறான நடத்தைகளை தவிர்ப்பது மாணவர்களின் கடமை

பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளை பின்பற்றுவது, பிறரை மதிப்பது, வன்முறை மற்றும் தவறான நடத்தைகளை தவிர்ப்பது மாணவர்களின் கடமை : தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர்



நூருல் ஹுதா உமர்

2026 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே மாணவர்கள் தங்களின் பல்கலைக்கழக வாழ்வை ஆரம்பிப்பது ஒரு சிறப்பான தருணம். புதிய ஆண்டு என்பது புதிய நம்பிக்கைகள், புதிய பொறுப்புகள் மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கும். இந்த நாளிலிருந்து மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அத்தியாயம் ஆரம்பமாகின்றது என இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தெரிவித்தார்.

முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் புதிய மாணவர்கள் இணைந்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வு 2026.01.01 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு புதிய மாணவர்களை நோக்கி சிறப்புரையாற்றினார். உபவேந்தர் தனது உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தேசிய பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் இடம்பெறுவது ஒரு அரிய வாய்ப்பு, இது மிகக் குறைந்த திறமையான மாணவர்களுக்கே கிடைக்கும் சிறப்பு சந்தர்ப்பம். எனவே, இந்த வாய்ப்பை பொறுப்புடனும் புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்த வேண்டும். பல்கலைக்கழக வாழ்க்கையில் கல்விசார் சவால்கள், மொழிசார் சிரமங்கள், பொருளாதார சிக்கல்கள், விடுதி மற்றும் புதிய சூழலுக்கு பழகுதல் போன்ற பல்வேறு சவால்கள் இருக்கலாம். இருப்பினும், இவை அனைத்தையும் எதிர்கால வாழ்க்கைக்கான பயிற்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் நீங்கள் கற்கும் அனைத்தும் நேரடியாக தொழிலில் பயன்படாவிட்டாலும், ஒழுக்கம், மனப்பாங்கு, சிந்தனை முறை, பிரச்சினைகளை தீர்க்கும் திறன் போன்றவை உங்கள் முழு வாழ்க்கைக்கும் வழிகாட்டும். பாடசாலை வாழ்க்கையை விட பல்கலைக்கழக வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது. இங்கு கிடைக்கும் சுதந்திரம் பொறுப்புடன் இணைந்திருக்க வேண்டும். பாடவகுப்புகளில் தவறாமல் பங்கேற்பது, பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவது, பிறரை மதிப்பது, வன்முறை மற்றும் தவறான நடத்தைகளை தவிர்ப்பது மாணவர்களின் கடமை.

மேலும், தென்கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சமமாக பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பல்கலைக்கழகம். இந்த பன்முகச் சூழலை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளுமாறு மாணவர்களை ஊக்குவித்தார். பகடிவதை என்பது இலங்கை சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும். பல துயர சம்பவங்கள் நீதிமன்றம் வரை சென்றுள்ளதை நினைவூட்டுகிறேன். இதனைத் தடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்க விதிமுறைகள் அமுலில் உள்ளதாகவும், அவை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களின் மனநலத்தை பாதுகாக்க ஹெல்ப்லைன் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது, அதன் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மாணவர்களுடன் தொடர்ச்சியான தொடர்பை பேணுமாறும், அவர்களின் மன அழுத்தம் மற்றும் நடத்தை மாற்றங்களை கவனிக்குமாறும் கேட்டுக் கொண்டதுடன் ஏதேனும் பிரச்சினைகள் தோன்றும் போது பல்கலைக்கழக அதிகாரிகளை அணுக ஊக்குவிக்க வேண்டும்.

இதுவரை தென்கிழக்கு பல்கலைக்கழகம் 16,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளதாகவும், முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம் மட்டும் சுமார் 5,000 பட்டதாரிகளையும் நூற்றுக்கு மேற்பட்ட பட்டமேற்படிப்பு பட்டதாரிகளையும் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்த அவர் இவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரச மற்றும் தனியார் துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றார். பல்கலைக்கழகத்தில் கல்வி, விளையாட்டு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், விடுதி வசதி இன்னும் சவாலாக உள்ளதாகவும், இதற்கான முன்மொழிவுகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் உபவேந்தர் தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் மாணவர்களின் பொறுமையும் ஒத்துழைப்பும் அவசியம் எனக் கேட்டுக் கொண்டார்.

No comments: