
இணையத்தின் மூலம் இளைஞர்கள் தீவிரவாத நோக்கத்தில் ஈர்க்கப்படுவதை தடுக்க, நான்கு புதிய அமைப்புகள் குற்றச்சாட்டுச் சட்டத்தின் (Criminal Code) தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
கனடா அரசு தீவிரவாதம் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகள் கனேடியர்களையும் சமூகங்களையும் மிரட்டல், வெறுப்பு, வன்முறை மற்றும் தீவிரவாதச் செயல்களில் இருந்து பாதுகாக்க உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி கீழ்க்கண்ட அமைப்புகளை பட்டியலில் சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளார்.
764, Maniac Murder Cult, Terrorgram Collective, மற்றும் இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் சிரியா (ISIS/Daesh) உடன் தொடர்புடைய Islamic State–Mozambique என்ற அமைப்புகளாகும்.
கனடாவின் குற்றச்சாட்டுச் சட்டத்தின் கீழ், இப்போது இந்த அமைப்புகள் “தீவிரவாத அமைப்புகள்” என சட்டபூர்வமாக வரையறுக்கப்படுகின்றன.
இதன் மூலம் கனடிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகள் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்கவும் தடை செய்யவும் வலுவான கருவிகளைப் பெறுகின்றன.
இந்த அமைப்புகள் கனடாவில் வைத்துள்ள சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு, CSIS அல்லது RCMP-க்கு அறிவிக்கப்பட வேண்டும்.
கனடாவில் உள்ளவர்கள் அல்லது வெளிநாடுகளில் உள்ள கனடியர்கள், இந்த அமைப்புகளின் சொத்துகளுடன் தொடர்புடைய எந்தச் செயலிலும் திட்டமிட்டு ஈடுபடுவது குற்றமாகும்.
இந்த அமைப்புகளுக்கு பயன்படும் வகையில் சொத்து, நிதி அல்லது சேவைகளை வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள், இந்த பட்டியலை குடிவரவு மற்றும் அகதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தங்கள் முடிவுகளில் பயன்படுத்தலாம்.
764, Maniac Murder Cult, Terrorgram Collective ஆகியவை எல்லை தாண்டிய, சிந்தனையால் தூண்டப்படும் வன்முறையை நோக்கமாகக் கொண்ட (IMVE) வலைப்பின்னல்கள். இவை சமூக வலைதளங்கள் மற்றும் ஒன்லைன் கேமிங் தளங்களில் மூலம் நபர்களை சேர்த்து, தீவிரவாத விளம்பரங்கள் மற்றும் வன்முறை கருத்துக்களைப் பரப்புகின்றன.
முதல் நாடு
கனடா, 764 அமைப்பை தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்ட முதல் நாடாகும்.இது குறிப்பாக குழந்தைகள் மற்றும் கனடியர்களின் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Islamic State–Mozambique (IS-M) என்பது அதிகாரப்பூர்வமான ISIS அமைப்பின் ஒரு பிரிவு. இது மொசாம்பிக்கில் செயல்படும் ஆயுதத் தீவிர அமைப்பு ஆகும். நாட்டின் நிர்வாகத்தை மாற்றி, ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி அமைக்க முனைவது இதன் நோக்கமாகும்.
இதற்காக இவர்கள் பகுதிகளை கைப்பற்றுதல், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் ஊடுருவல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த அமைப்புகளை பட்டியலில் சேர்த்தது, அவற்றின் சட்டவிரோத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்த்து கனடாவின் பாதுகாப்பு, நுண்ணறிவு மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகள் மேலும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்க உதவும்.
இது கனடிய சமூகங்களை இன்னும் பாதுகாப்பாக மாற்றும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: