நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய ஆதம்பாவா அஸ்வர் வகித்து வந்த நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2025.10.31 அன்று பிரகடனப்படுத்தியுள்ளார். இது குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கான பிரகடனத்தில் நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் 10 மாதம் 24ம் தேதி ஒப்பமிட்டு வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளரான எம்.எச்.எம்.பைரூஸ் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி பிரதேச சபையின்) உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் நாகலிங்கம் ரேகன் 2025.10.31 அன்று பிரகடனப்படுத்தியுள்ளார். இது குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கான பிரகடனத்திலும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் 10 மாதம் 24ம் தேதி ஒப்பமிட்டு வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த எம்.எச்.எம்.பைரூஸ் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கைக்கு முரணாக செயற்பட்டமையால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments: