
பாகிஸ்தானுக்கு சொந்தமான ராணுவ டாங்கிகளை ஆப்கானிஸ்தான் ராணுவம் சிறைபிடித்ததாக தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு ஆப்கானிய படைகள் தகுந்த பதிலடி கொடுத்தன. இதில், ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கு சொந்தமான ராணுவ டாங்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை ஆப்கன் படைகள் அழித்துவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே 48 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்வதற்கு முன்பு ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில் உள்ள ஸ்பின் போல்டாக் மாகாணத்தின் தெருக்களில் பாகிஸ்தானிடமிருந்து சிறைபிடிக்கப்பட்ட ராணுவ டாங்கிகள் அணிவகுத்து செல்வதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
ஆனால், இதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது. வீடியோக்களில் காணப்படும் டாங்கிகள் தங்கள் ராணுவத்துக்கு சொந்தமானது இல்லை என்று கூறியுள்ளது. இது குறித்து ஜியோ நியூஸுக்கு அளித்த பேட்டியின் போது பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், “அவர்கள் (ஆப்கானிஸ்தான்) பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதாக வீடியோக்களை காட்டுகின்றனர். ஆனால், அது எங்களுக்கு சொந்தமானது இல்லை. அதனை அவர்கள் ஏதாவது பழைய இரும்புக்கடையிலிருந்து வாங்கியிருக்கலாம்” என்றார்.
இந்த செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியாத நிலையில், ஏஐ உதவியுடன் தேடும்போது, அது ஒரு சோவியத் கால T-55 டாங்கி என்பது தெரியவந்தது. இது, 1980-களில் இருந்து ஆப்கானிஸ்தான் வசம் உள்ளதாக தெரியவந்துள்ளது
No comments: