யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பு!

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி இன்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோப்பாய், இராச வீதியில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி பல வருடங்களாகப் பொலிஸாரின் பயன்பாட்டில் இருந்து வந்தது.
அந்தக் காணியின் உரிமையாளர்கள், காணியைத் தம்மிடம் கையளிக்குமாறு, 2019ஆம் ஆண்டு காணிகளுக்குச் சொந்தமான 9 உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
குறித்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கடந்த 6 ஆண்டுகளாக யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைய பெற்றுள்ள காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.
எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பொலிஸார் காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவில்லை.
இந்தநிலையில் இன்றையதினம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற அதிகாரியால் கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்காலிகமாக அந்தப் பகுதியின் முறைப்பாடுகளை யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் ஆயுதக் கிடங்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு மாதங்களில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை மீண்டும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: