
துபாயில் நேற்று(28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பின்னர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது இந்திய அணி ஆசிய கிண்ணத்தை ஏற்க மறுத்துவிட்டது.
கிண்ணம், ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஆகியோரால் வழங்கப்பட இருந்ததால் அதனை பெற்றுக்கொள்ள இந்திய அணியினர் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கிரிக்கட் சபை தலைவரிடமிருந்து ஆசிய கிண்ணத்தை வாங்குவதில்லை என்று முடிவு செய்ததாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் தேவஜித் சைகியா கூறியுள்ளார்.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனினும் கிண்ணமும் பதக்கங்களும் விரைவில் இந்தியாவுக்குத் திருப்பித் தரப்படும் என்று தாம் நம்புவதாக சைகியா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் துபாயில் ஒரு ஐ.சி.சி மாநாடு உள்ளது.
அதன் போது ஆசிய கிரிக்கெட் சபை தலைவரின் செயலுக்கு எதிராக இந்தியா மிகவும் கடுமையான மற்றும் மிகவும் வலுவான எதிர்ப்பைத் தொடங்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துபாய் நேரப்படி இரவு 10.30 மணியளவில் போட்டி முடிவடைந்தாலும், பரிசளிப்பு நள்ளிரவு வரை நீடித்தது.
தாமதத்துக்கான காரணம் ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் இந்திய அணி நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற விரும்பவில்லை என்ற ஊகம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: