- மனுவை மீண்டும் விசாரணைக்குட்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசாங்க சேவையில் பணிபுரியும் 4 தர மட்டங்களைக் கொண்ட தாதியர்கள் 60 வயதில் கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும் என கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த இடைக்காலத் தடையுத்தரவை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் இன்று (17) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் மேற்படி விடயத்துடன் சம்பந்தப்பட்ட தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேன் முறையீட்டு நீதிமன்றத்தால் விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை யுத்தரவு சட்டத்திற்கு முரணானது என்றும் அதனை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதையடுத்து மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யசந்த கோத்தாகொட, ஜனக டி சில்வா, மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.
அரசாங்க ஊழியர்கள் 60 வயதில் கட்டாயமாக ஓய்வு பெறுவதற்கு கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சரவையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன் அதற்கு எதிராக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட தரப்பினார் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.
அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் மேற்படி இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.
எவ்வாறாயினும் சட்டத்திற்கு முரணான வகையில் இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான உத்தரவை பிறப்பிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என தெரிவித்து சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மேற்படி மனுவை தாக்கல் செய்திருந்தார்.
No comments: