News Just In

1/11/2025 07:39:00 AM

தமிழரசு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம்..!

தமிழரசு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம்..!



தமிழரசு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கையில், "தமிழரசுக் கட்சிக்குள் சிறீதரன் பிரிவு தாயக மைய அரசியலையும், சுமந்திரன் பிரிவு கொழும்பு மைய அரசியலையும் முன்னெடுத்து வருகின்றது.

இதுவே இவ்விரண்டு பிரிவினருக்குமுள்ள கொள்கை முரண்பாடாகும். இந்த கொள்கை முரண்பாட்டை தெளிவாக புரிந்து கொள்ளாவிட்டால் முரண்பாட்டைத் தீர்ப்பது கடினமாக இருக்கும். சுமந்திரன் பிரிவு மத்திய குழுவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டு தனது மேலாதிக்க நிலையை நகர்த்தி வருகின்றது. சிறீதரன் பிரிவுக்கு பொதுச் சபையில் தான் செல்வாக்கு உண்டு.

மத்திய குழுவில் ஆதரவு குறைவு. ஆதரவு கொடுத்த பலரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அன்றாட கருமங்களோடு பொதுச்சபை பெரியளவிற்கு தொடர்புபடுவதில்லை. மத்திய குழுவே தொடர்புபடுகின்றது. இதனால் சுமந்திரன் பிரிவின் நகர்வுகளே கட்சியின் நகர்வுகளாக வெளியில் காட்சியளிக்கின்றன.

நாடாளுமன்ற குழுவிற்குள் சுமந்திரன் பிரிவுக்கு பெரிய செல்வாக்கு கிடையாது. சாணக்கியனும், சத்தியலிங்கமும் மட்டும் சுமந்திரன் பிரிவுக்கு ஆதரவாக உள்ளனர். இந்த இருதரப்புக்கும் இடையேயான கொள்கை முரண்பாட்டை புரிந்து கொள்வதற்கும் எத்தரப்பினுடைய கொள்கை சமகாலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்றது என்ற தீர்மானத்திற்கு வருவதற்கும் இரு கொள்கைகளினதும் சாதக, பாதகங்களை அறிந்து கொள்வது அவசியமாகும்.

இந்தக் கொள்கை நிலைப்பாடுகள் தமிழ் அரசியலின் தலைவிதியை தீர்மானிப்பதில் பாரிய பங்கினை வகிக்கின்றன. தாயக மைய அரசியல் தாயகத்தின் நலன்களை முதன்மைப்படுத்துவதாக இருக்கும். மாறாக கொழும்பு மைய அரசியல் கொழும்பு நலன்களை முதன்மைப்படுத்துவதாக இருக்கும். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வரும் வரை எதிர்ப்பு அரசியல் அவசியமானது.

அதுவே, தமிழ்த் தேசிய அரசியலை தக்க வைக்க உதவும். 30 வருட காலம் அகிம்சை ரீதியான போராட்டங்களினூடாகவும், தொடர்ந்து 30 வருட காலம் ஆயுதப் போராட்ட அரசியல் ஊடாகவும் எதிர்ப்பு அரசியல் தக்கவைக்கப்பட்டது. இதன் வழி தமிழ்த் தேசிய அரசியல் பாதுகாக்கப்பட்டது. எதிர்ப்பு அரசியல் எப்போதும் தாயகத்தை முதன்மைப்படுத்தியதாக இருக்கும்.

No comments: