கிளிநொச்சியில் அமையப் பெற்றுள்ள சமாதான சகவாழ்வு அருங்காட்சிக் கலையரங்கில் சர்வ மதத்தவர்களின் பங்கேற்புடன் சமாதான நிகழ்வுகள் இடம்பெற்றதாக அருங்காட்சியக திட்ட இணைப்பாளர் எம். யாழினி தெரிவித்தார்.
பௌத்த, ஹிந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயப் பெரியார்கள், செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் செயற்பாட்டாளர்கள், சமாதான சகவாழ்வு ஆர்வலர்களான நெதர்லாந்து நாட்டுப் பிரஜைகள், சமூகத் தலைவர்கள், இளைஞர் யுவதிகள் ஆகியோர் பங்குபற்றிய இந்த நிகழ்வில் சமாதான சௌஜன்ய சகவாழ்வக்கான நிகழ்வுகள் இடம்பெற்றன.
வளரிளம் பருவத்தினருக்கிடையில் சாதி, சமய, மொழி வேறுபாடுகளைக் கடந்த ஒப்புரவும் ஒருங்கிணைவும் நிலவ வேண்டியதன் அவசியத்தை சர்வமதப் பெரியார்கள் பாரம்பரிய மத விழுமியங்களுடன் சுட்டிக் காட்டினர்.
குறிப்பாக, இளையோர்கள் மத்தியில் இன, மத பாகுபாடுகள் இருக்கக் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டதுடன் மனித நேயம், காருண்யம், அன்பு, அகிம்சை, அரவணைப்பு ஆகிய விழுமியங்கள் மேலோங்க வேண்டும் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
மேலும், வன்முறைக்குப் பதிலாக நன்முறைகளைப் பயன்படுத்திக் கொண்டு சமூகங்களுடன் இணைந்து வாழ்வதற்கு இளையோர் வழி காட்டவும், வழி தேடவும் வேண்டும் என்றும் அங்கு வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வுகளின் துவக்கத்தில் சமாதான, சௌஜன்ய சகவாழ்வுப் பொங்கல்; பொங்கி பரிமாறப்பட்டது.
தந்தை செல்வா சமாதான சகவாழ்வு அருங்காட்சிக் கலையரங்கு தந்தை செல்வா அவர்களின் நினைவாகவும் யுத்தத்திலிருந்து மீண்டெழும் தமிழ் பேசும் மக்களின் வல்லமையின் எடுத்துக் காட்டாகவும் 15.11.2022 இல் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.
அன்று தொடக்கம் இன்றுவரை தந்தை செல்வா அறக்கட்ளை பல்லின சகவாழ்வு, சமாதான நடவடிக்கைகளுக்காக இயங்கி வருகின்றது.
No comments: