மனிதர்களை ஆவியாக்கும் ஆயுதங்களை பயன்படுத்தும் இஸ்ரேல்
மனிதர்களை ஆவியாக்கும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ‘காசா’வில் இஸ்ரேல் பயன்படுத்துவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட குறித்த ஆயுதங்களை இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசா பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வடக்கு காசா பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களின்படி இதுவரை கண்டிராத புதியவகை ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஆயுதங்கள் மக்களை ஆவியாகச் செய்வதாக காசா சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் முனிர் அல்-புர்ஷ் தெரிவித்துள்ளார். அல் ஜசீரா ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் ,
இஸ்ரேலியப் படைகள் இதுவரை அறியப்படாத ஆயுதங்களை பயன்படுத்துகின்றன, இதன் விளைவாக மனித உடல்கள் ஆவியாகின்றன, இதன் மூலம் சரியான உயிரிழப்பு எண்ணிக்கையை கணக்கிடுவது தடுக்கப்படுகிறது.
இஸ்ரேல் இத்தகைய ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்துவது காசாவில் புதிய அளவிலான அழிவை ஏற்படுத்தும். இது வரலாற்றில் வேறு எந்த மோதலையும் போல அல்ல.
காசாவில் இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்களின் வகைகள் மற்றும் பொதுமக்கள் மீது அவற்றின் தாக்கம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அதேசமயம் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஹமாஸ் அமைப்பும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள Euro-Med Human Rights Monitor அமைப்பு,
வடக்கு காசாவில் குடியிருப்பு கட்டிடங்கள் மீதான இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் மறைந்து சாம்பலாக மாறியிருக்கலாம். அவர்களின் உடல் காணாமல் போயிருப்பது இஸ்ரேல் தாக்குதலுக்கு பயன்படுத்திய குண்டுகளின் வகை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.
காசா முழுவதும் உள்ள பல்வேறு கல்லறைகளில் இருந்தும், இஸ்ரேலிய ராணுவம் தாக்கிய பகுதிகளில் இருந்தும் சுமார் 2,210 உடல்கள் மாயமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
தெர்மோபரிக் குண்டுகள் உட்பட சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் இது தொடர்பில் , சர்வதேச விசாரணை நடத்தப்பட என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வகை குண்டுகள், முதலில் சிறிய தாக்கம் கொண்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்தி துகள்கள் நிரப்பிய மேகமூட்டத்தை உருவாக்குகிறது.
அதன் பின் இரண்டாவதாக வெடிக்கும் சாதனம் எரியக்கூடிய பொருட்களை கொண்டு மேக பகுதியை பற்றவைத்து, 2500 டிகிரி செல்சியஸ் வரை மிக அதிக வெப்பநிலையை உருவாக்குகிறது.
இது தோல் மற்றும் உட்புற உடல் பாகங்களை கடுமையாக எரித்து சிதைகிறது. குறிப்பாக இந்த மேகமூட்டம் அடர்த்தியாக ஏற்படுத்தப்படும் பகுதிகளில் உடல்கள் முழுமையாக உருகும் அல்லது ஆவியாகும் அளவிற்கு எரிகின்றன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12/05/2024 06:12:00 PM
மனிதர்களை ஆவியாக்கும் ஆயுதங்களை பயன்படுத்தும் இஸ்ரேல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: