News Just In

9/06/2024 06:26:00 AM

இந்திய தூதரகத்தில் நடைபெற்ற சந்திப்பையடுத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஆளுநரின் பதவி விலகல்




ஊவா மாகாணத்தின் ஆளுநராக கடமையாற்றிய முஸம்மில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை அரச விதிகளுக்கு முரணாக சந்தித்துள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (05.09.2024) இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னரே முஸம்மில், தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பு அரச விதிகளுக்கு முரணாக இடம்பெற்றுள்ளமையால் பல்வேறு இராஜதந்திர நெருக்கடிகள் ஏற்படலாம் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் முஸம்மில் தரப்பிலிருந்தோ இந்தியத் தூதரகத் தரப்பிலிருந்தோ எந்தவொரு கருத்துக்களும் வெளிவரவில்லை.
இரண்டாம் இணைப்பு

ஊவா (Uva) மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் (Muzammil) தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக முஸம்மில் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முஸம்மில், 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை கொழும்பு மேயராக பணியாற்றியுள்ளதுடன் 2017 - 2019ஆம் ஆண்டுகளில் நல்லாட்சி காலத்தில் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

அதன்பின்னர், அவர் 2019இல் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதுடன் 2020இல், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்

No comments: