இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்துவரும் ஒருவர். ‘தமிழ்ப்பொது வேட்பாளரை தோற்கடிப்பேன்’ என்று பகிரங்கமாகவே கூறியிருந்தார். இதே போன்று, கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான சீ. வீ. கே. சிவஞானமும் தமிழ்ப்பொது வேட்பாளர் தொடர்பில் தொடர்ந்தும் எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகின்றார். ஆனால், சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், இது தொடர்பில் எந்தவோர் உறுதியான முடிவையும் எடுக்கவில்லை என்பதுடன் – தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் ஆதரவும் இல்லை.
இதேவேளை எதிர்ப்பும் இல்லை என்னும் அடிப்படையிலேயே தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றனர். இத்தனைக்கும் தமிழ் அரசுக்கட்சியின் மத்திய குழுவை சேர்ந்த ஒருவரே தமிழ்ப் பொது வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கின் றார். அவரிடம் விளக்கம் கோரவுள்ளதாக அறிவித்திருக்கின்றனர். கட்சி ஆதரவும் இல்லை – எதிர்ப்பும் இல்லை என்று கருதும் ஒரு விடயம் தொடர்பில் என்ன விளக்கத்தைக் கோர முடியும்? தமிழ் அரசு கட்சி – குறிப்பாக, சுமந்திரன் அணியினர் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை உறுதியாக எதிர்ப்பது உண்மையாயின், ஏன் கட்சியால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாமல் இருக்கின்றது? எதற்காக தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் மதில் மேல் பூனை நிலைப்பாட்டை மேற்கொள்கின்றனர்? தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாடு தவறானது.
அது தமிழ் மக்களுக்கு பாதகமான விளைவுகளையே வழங்கும் என்றால் – எதற்காக பாதகமான ஒரு விடயம் தொடர்பில் தீர்மானத்தை நிறைவேற்ற கட்சி தடுமாறுகின்றது?
No comments: