News Just In

7/01/2024 06:30:00 PM

தமிழ் பொது வேட்பாளர் தோல்வியடைவாரா?



தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் முன்னகர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை கொள்கையளவில் ஆதரிக்கும் ஏழு தமிழ்த் தேசிய கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் ஓர் உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் ஏற்பட்ட முக்கிய நகர்வாக இதனைக் குறிப்பிடலாம். எனினும், இன்னும் பல படிகளைத் தாண்ட வேண்டியிருக்கின்றது. பல வகையான சவால்களையும் தாண்ட வேண்டியிருக்கும். ஏனெனில், தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை தோற்கடிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் தமிழ்த் தேசிய பரப்புக்குள்ளும் ஓர் அணியுண்டு.

ஒப்பீட்டு அடிப்படையில் ஏனைய அனைத்து வகையான சவால்களை விடவும் இவர்களால் எழக்கூடிய சவால் மிகவும் சிக்கலானது என்பதுடன், அதிக தாக்கம் செலுத்தக்கூடியது. தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலிருந்து எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் பிரதான வாதம் – தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – தமிழ் பொது வேட்பாளர் பெரும்பான்மையான தமிழர்களின் ஆதரவைப் பெறமாட்டார் – அது நடக்கவில்லை யென்றால் ஒரு விஷப்பரீட்சையாகிவிடும்.

குறிப்பாக, இவ்வாறான வாதத்துக்கு தலைமை தாங்குபவராக எம். ஏ. சுமந்திரன் இருக்கின்றார். அவர் இந்த விடயத்தில் வெளிப்படையான ஒருவராக இருக்கின்றார். ஆனால், ஏன் சுமந்திரன் போன்றவர்கள் எதிர்ப்பதற்கு மாறாக அனைவருடனும் இணைந்து இதனை ஒரு வெற்றிகரமான விடயமாக மாற்றுவதற்கு உழைக்கக்கூடாது? அவ்வாறானதோர் அரசியல் தீர்மானத்தை எடுக்க முடியாதளவுக்கு அவர்களைத் தடுக்கும் காரணி என்ன? அந்தளவு கொழும்புடனான தேனிலவை முறித்துக்கொள்ள முடியாமல் இருக்கின்றதா? கொழும்புடன் அரசியல் ரீதியில் ஊடாடத்தான் வேண்டும்.

ஆனால், அந்த ஊடாட்டம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை மலினப் படுத்துவதாக இருக்கக்கூடாது. தமிழ் பொது வேட்பாளர் தோல்வியடைந்து விடுவார் என்னும் வாதத்தை முன்வைப்பவர்கள் ஒரு விடயத்தை தங்களின் வசதி கருதி மறந்துவிடுகின்றனர். அதாவது, கடந்த பதினைந்து வருடங்களாக அவர்கள் முன்னெடுத்த அரசியல் நகர்வுகளும் படுமோசமான தோல்வியைத்தான் சந்தித்திருக்கின்றன என்பதை மறந்துவிடுகின்றனர்.

இந்தக் காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன என்று கூறப்படும் அனைத்து அரசியல் நகர்வுகளையும் பிரதான மாக தீர்மானித்தவர்களில் ஒருவர் எம். ஏ. சுமந்திரன். ஆனால், அவரோ தனது தோல்வியை ஆராயாமல் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை தோற்கடிப்பது பற்றி யோசிக்கின்றார்.

தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு பெரும்பான்மை ஈழ மக்களை சென்றடையுமானால் அது நிச்சயம் பெருவெற்றியை பெறும். அனைத்துக் கட்சிகளும் – சிவில் சமூக அமைப்புகளும் – புத்திஜீவிகளும் இது எங்களுடைய தமிழ்த் தேசிய பணி என்று எண்ணி அதற்காக உறுதியுடன் – அர்ப்பணிப்புடன் உழைத்தால் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு நிச்சயம் வெற்றியைப் பெறும். மக்களை நம்பினால் மட்டும்தான் அரசியலை முன்னெடுக்க முடியும்.
நன்றி ஈழநாடு 

No comments: