News Just In

6/02/2024 11:20:00 AM

தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கியே தீருவோம் !சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்!



ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவதில் உறுதியாக உள்ளோம் என்று வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவின் அங்கத்தவர்கள்  தெரிவித்ததோடு களமிறக்கப்படும் வேட்பாளர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் கரிசனை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

அரசியல் கட்சிகள் கால அவகாசத்தினை கோரியுள்ள நிலையில் அத்தரப்புக்களுடன் இரண்டாம் கட்டமாகவும் பேசுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அப்பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அத்துடன், அரசியல் கட்சிகளின் முடிவுகள் கிடைக்கும் வரையில் காத்திருக்காமல், வணிகர் கழகம் கடற்றொழிலாளர் சங்கங்கள், கூட்டுறவு ஒன்றிணைந்த சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் தமிழ் பொதுவேட்பாளர் விடயத்துக்கு ஆதரவு திரட்டும் முகமாக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் தீவிரப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

முன்னதாக, ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் நான்கு முனைகளில் நகர்வுகள் செய்யப்பட்டு ஈற்றில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை மையப்படுத்தி பத்துப்பேர்கொண்ட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது.

குறித்த குழுவானது பொதுவேட்பாளர் தொடர்பான பொதுக்கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்காக பணியாற்றும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த குழுவானது அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தது.

குறித்த சந்திப்புக்களின் அடிப்படையில் அரசியல்கட்சிகள் தமது தீர்க்கமான முடிவினை அறிவிப்பதற்கு காலஅவகாசத்தினைக் கோரியுள்ள நிலையில் தற்போது சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவானது தமது கட்டமைப்பை வலுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதேநேரம், யாழ்.வணிகர் கழகம், பார ஊர்தியாளர்கள் சங்கம், கடற்றொழிலாளர் சங்கங்கள், ஒன்றிணைந்த கூட்டுறவாளர் சங்கம் உள்ளிட்ட பலதரப்பட்ட கட்டமைப்புக்களையும் சந்தித்து அவற்றின் ஆதரவுகளை திரட்டும் பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: