News Just In

5/13/2024 02:03:00 PM

தொற்று நோயை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்தியது போல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? - அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி



தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்திய பொலிஸார். அதேபோல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரால் இன்று திங்கட்கிழமை (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உப்பு கஞ்சி பகிர்வோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்திருக்கையில் சம்பூர் பொலிஸார் கஞ்சி பகிருதலை தடுப்பதற்காக மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவை பெற்றிருப்பதோடு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் என இதுவரை நால்வரை கைது செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மக்கள் ஒன்று கூடுதல் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது எனவும் காரணம் காட்டி உள்ளனர்.

இது கொரோனா காலத்தில் பயன்படுத்திய சொற் தொடராகும். அதனையே மீண்டும் நினைவேந்தலை தடுத்து நிறுத்தும் ஆயுதமாக கையில் எடுத்திருப்பதும் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதும் இறந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும்.

சம்பூர் பொலிஸார் இத்தகைய அராஜக செயலை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு எதிர்வரும் வெசாக் பண்டிகையின் போது அதே தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? எனவும் கேட்கின்றது.

No comments: