News Just In

3/28/2024 07:15:00 PM

பெண்கள் தங்களது வாழ்க்கையின் கூடுதலான காலத்தை மற்றவர்களுக்காகவே செலவழிக்கிறார்கள்

மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எஸ். அருள்ராஜ்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

உன்னிப்பாகக் கவனித்தால் பெண்கள் தங்களது வாழ்க்கைக் காலத்தின் பெரும்பாலான பகுதியை மற்றவர்களுக்காகவே அர்ப்பணித்திருப்பதை அவதானிக்க முடியும் இதுவொரு உயர்ந்தபட்ச தியாகமாகும் என திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எஸ். அருள்ராஜ் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட பெண்கள் செயலணியினரின் பரஸ்பர நட்புறவுடனான அனுபவப் பகிர்வு கற்றல் ஒன்றுகூடல் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் திருகோணமலை மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அலுவலர் சுவர்ணா தீபானி தலைமையில் மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன் நிகழ்வு இடம்பெற்றது.

சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அருள்ராஜ், வீடு. அலுவலகம். பொதுத் தொண்டு என்று பெண்களின் பணியும் பங்கும் பாத்திரமும் தியாகத்துடன் கூடியது. தமது சொந்த நலன்களைப் புறந்தள்ளி விட்டு அடுத்தவர்களுக்காகவே தங்களை அர்ப்பணித்து அடுத்தவர்களுக்காகவே சிந்தித்து அடுத்தவர்களுக்காகவே ஓய்வின்றி உழைத்து உருக்குலைந்து போகும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இல்லை. எனவே அவர்களுக்கும் இந்த மானுடப் பிறவியில் மகிழ்ச்சியும் ஓய்வும் உடல் ஆரோக்கியமும் உரிமைகளும் தேவை. பொருளாதாரச் சுமை குடும்பச் சுமை உள்ளிட்ட அனைத்தையும் அவர்களே சுமக்க வேண்டியுள்ளது.

எனவே, பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் இல்லாமலாக்கி பெண்களை ஆளுமை மிக்கவர்களாக வலுவூட்டுவதற்கு முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்”என்றார்.

இந்நிகழ்வுகளில் திருகோணமலை மாவட்ட செயலக அலுவலர்கள், பெண்கள் அபிவிருத்தி அலுவலர்கள், மாவட்ட பெண்கள் செயலணித் தலைவி எச்.டபிள்யூ. சுஜாதா, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் களப் பணியாளர்களான பி. சற்சிவானந்தம், ஜே.தவமுரளி, வி. மோகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

ஒன்று கூடல் அனுபப் பகிர்வு நிகழ்வில் கலை அம்சங்களும் கேள்வி பதில் போட்டிகளும், தனி குழு நடனங்களும் விருது வழங்கலும் இடம்பெற்றன.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் 2012ஆம் ஆண்டிலிருந்து சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவுத்துறை சார்ந்த திட்டங்களையும், பெண்கள் வலுவூட்டலோடு அபிவிருத்திகளை உறுதிப்படுத்தும் வகையில் பயிற்சிகள், செயலமர்வுகள், விழிப்புணர்வுகள், தொழில்துறை உற்பத்திக் கண்காட்சிகள், கற்றல் கள விஜயங்கள், பொருளாதார வாழ்வாதார உதவு ஊக்கங்கள் என்பனவற்றை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: