
மட்டக்களப்பிற்கு வரும் அபிவிருத்தி திட்டங்களை மாவட்டத்திலுள்ள இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் தடை செய்வதாக முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தியாகராஜா சரவணபவான் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்றைய தினம் நடைபெற்ற கனடா மட்டக்களப்பு நட்புறவு பண்ணை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் மேயராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பண்ணையானது இன்று நிறைவு பெற்று திறந்து வைக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரும் அபிவிருத்தி திட்டங்களை ஒரு போதும் தடுப்பது கிடையாது. எந்த தரப்பு அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வந்தாலும் அதற்கான அனுமதிகளை நான் வழங்கியுள்ளேன்.
அந்த வகையில் தான் இந்த கனடா மட்டக்களப்பு நட்புறவு பண்ணைக்கான இடத்தினை வழங்கி இருந்தேன். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் தங்களுக்கு ஊடாக செய்யப்படாத அபிவிருத்தி திட்டங்களை தடுத்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர்களுக்கு ஊடாக மட்டுமே அபிவிருத்தி திட்டங்களை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர்.
இன்று மாவட்டத்திற்கு அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவர வேண்டிய இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் ஏனையவர்கள் கொண்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை உரிமை கொண்டாடி வருகின்றனர்.
உதாரணமாக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப் படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை இவர்கள் கொண்டு வந்த அபிவிருத்தி திட்டங்கள் போன்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் நான் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர் புலம்பெயர் சமூகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி உள்ளோம். அவர்களுக்கான காணிகள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றோம்.” என்றார்.
No comments: