News Just In

1/26/2024 10:52:00 AM

இளையராஜாவின் மகள் பவதாரணி திடீர் மரணம் : இசை நிகழ்ச்சியில் மாற்றம்!


கொழும்பில் நாளை(27) மற்றும் நாளை மறுதினம்(28) ஆகிய தினங்களில் இசைஞானி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி நேற்றையதினம்(25) உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் மாலை திடீரென உயிரிழந்தார்.

இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகைத் தந்திருந்த இசைஞானி இளையராஜா உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு விரைந்ததுடன், அதன் பின்னர் பவதாரணியின் உடல் கொழும்பில் உள்ள மலர் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும், இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் தற்போது கொழும்பு நோக்கி வருகைத் தரவுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.

இதேவேளை, வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் இசைஞானி இளையராஜாவி இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அந்த நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், திடீரென ஏற்பட்ட இந்த அசம்பாவிதம் காரணமாக நிகழ்ச்சி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன், யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த பவதாரணியின் மரணத்தினால் அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

No comments: