News Just In

12/13/2023 12:38:00 PM

இளைஞர் யுவதிகள் தொழில் முனைவோராக உருவாகி பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து கொள்ள வேண்டும்!.தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர்


தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர் கலாராணி


- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நிறைந்து காணப்படுகின்ற வாய்ப்புக்களையும் வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டு இளைஞர் யுவதிகள் தொழில் முனைவோராக உருவாகி போதுமான பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து கொள்ள வேண்டும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜே. கலாராணி தெரிவித்தார்.

அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ உதவு ஊக்க நிறுவன செயல்திட்டத்தின் வவுணதீவு - சாளம்பைக்கேணியில் ஆடை உற்பத்திக்கான இளையோர் ஆற்றல் அபிவிருத்தி தொழில் வள நிலைய செயற்பாடுகளை புதன்கிழமை 13.12.2023 பார்வையிட்ட பின்னர் அங்கு ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள யுவதிகள் பெண்கள் மத்தியில் அவர் கருத்துத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து வழிகாட்டல் கருத்துக்களை வெளியிட்ட உதவிப் பணிப்பாளர் கலாராணி,

அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ உதவு ஊக்க நிறுவனத்தினால் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினூடாக இங்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் இந்தப் பிரதேச இளஞைர் யுவதிகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.

தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளையோரை தொழில் முனைவோராக மாற்றுவது சமகாலத் தேவையாக உள்ளது. இந்த முயற்சி தனிப்பட்டவர்களினதும், குடும்பத்தினதும், சமூகத்தினதும் நாட்டினதும் பொருளாதாரத்தை தன்னிறைவு என்ற நிலைக்குக் கட்டியெழுப்ப உதவி புரியும்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இதுபோன்ற ஆக்கபூர்வமான செயல்திட்டங்களுக்கு இளைஞர் யுவதிகளை ஊக்குவித்து வருகின்றது.

இங்கு வவுணதீவு பிரதேசத்தில் யுவதிகளையும் பெண்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆடையுற்பத்தி தொழில் முனைவோர் முயற்சிகள் எதிர்காலத்தில் மாவட்டத்தின் ஆடை உற்பத்தித் துறையில் பெண்களின் ஆற்றல்களைப் பறைசாற்றும் என்பதில் ஐயமில்லை.

இது ஒரு மினி ஆடைத் தொழிலகமாக பரிணமிக்கும்போது இந்தப் பிரதேச பெண்களின் முன்னேற்றத்தில் சிறந்த பொருளாதார கல்வி சமூக மாற்றத்தை இது ஏற்படுத்தும். அத்தகைய நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் தயாராக உள்ளது” என்றார்.

இந்நிகழ்வில் சைல்ட் பண்ட் நிறுவனத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு களப்பணி முகா மையாளர் கசுன் சம்பத் சஞ்ஜய சோமரத்ன, அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன், தேசிய இளைஞர் சேகைள் மன்ற இளைஞர் சேவைகள் பயிற்சி அலுவலர் மதிசுதன் பிரியங்கன் உட்பட ஆடைத் தொழிலக தொழில் முனைவோரான யுவதிகளும் பெண்களும் கலந்து கொண்டனர்.


No comments: