
ஒரு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா.
2023-ம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
கடந்த 45 நாட்களாக நடைபெற்ற இந்த தொடர் இன்று அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் இந்திய அணி தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா தனது அதிரடியான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா பந்து வீச்சாளார்களை கதிகலங்க வைத்தார்.
அவர் 31 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் இந்த உலகக் கிண்ண தொடரில் ஒட்டு மொத்தமாக 597 ஓட்டங்களை கடந்தார்.
இதுவே ஒரு அணியின் தலைவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக உள்ளது.
இதற்கு முன்னர் 2019-ம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் கேன் வில்லியம் சன் 578 ஓட்டங்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.
அதனை ரோகித் சர்மா தற்போது முறியடித்துள்ளார்.
இந்த உலகக் கிண்ண தொடரில் சிறப்பான ஆட்டத்தை ரோகித் சர்மா வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் தொடர்ந்து 5 போட்டிகளில் அரை சதத்தை தவறவிட்டுள்ளார்.
அதாவது 3 லீக் ஆட்டங்களில் 40, 46, 48 ஓட்டங்களும், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் 47, 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்துள்ளார்.
இதேவேளை, உலகக் கிண்ண வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் என்ற பட்டியலில் விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.
உலகக் கிண்ண வரலாற்றில் அதிக ஓட்டங்களை கடந்த வீரர்கள் பட்டியலில், முன்னாள் அவுஸ்திரேலிய அணி தலைவர் ரிக்கி பொன்டிங்கை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி இவ்வாறு முன்னேறியுள்ளார்.
ரிக்கி பொன்டிங் உலகக் கிண்ண தொடர்களில் 46 போட்டிகளில் விளையாடி 1,743 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
இதனை கோலி 37 போட்டிகளில் கடந்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
அவர் 47 ஆட்டங்களில் 2278 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
கோலிக்கு இன்னொரு உலகக் கிண்ண தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், சச்சினின் சாதனையை அவர் முறியடிக்கக்கூடும். ஆனால், அதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவாகவே உள்ளது
No comments: