News Just In

11/21/2023 10:02:00 AM

இம்முறை பாதீட்டில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.!இரா.சாணக்கியன்




பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 6 ஆம் நாள் விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் ஆற்றிய உரையின் ஒருபகுதி

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.விடுதலை போராட்டம் மௌனிக்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றும் பெரும்பாலான பகுதிகள் பின்தங்கிய நிலையில் உள்ளன.

தமது பிரதிநிதிகள் ஆளுங்கட்சியிலும்,அரசாங்கத்திலும் அங்கம் வகித்தால் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று பகல் கனவு கண்டு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இரண்டு பிரதிநிதிகளை ஆளும் தரப்புக்கு தெரிவு செய்தார்கள் அவர்கள் அமைச்சு,இராஜாங்க அமைச்சு பதவிகளை வகிக்கிறார்கள்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.ஆகவே வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா,எதிராக வாக்களிப்பார்களா என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.மக்களுக்கு பயனற்ற வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளுக்கு மக்கள் எதிர்வரும் காலங்களில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

யுத்த காலத்தில் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்ட தரப்பினருக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து சர்வதேச விசாரணைகளை கோரிய போது உள்ளக பொறிமுறையில் விசாரணைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டவர்களை பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும்.அத்துடன் மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்க வேண்டும் என்பது நாட்டு மக்களின் பிரதான வலியுறுத்தலாக காணப்படுகிறது.பொருளாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கியவர்கள் மாத்திரமல்ல,அவர்களுக்கு துணை போனவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களின் அரசாங்கம் தான் இன்றும் நடைமுறையில் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.மீன்பிடி மற்றும் விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கம் உரிய அவதானம் செலுத்தவில்லை.இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் விடுவிக்கப்படுகிறார்கள்.இவ்வாறான பின்னணியில் எவ்வாறு கடற்றொழிற்றுறையை மேம்படுத்த முடியும்.

நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.ஆனால் எவற்றுக்கும் தீர்வு முன்மொழியப்படவில்லை.அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாக குறிப்படுகிறது.மறுபுறம் வற் வரி அதிகரிக்கப்படுகிறது.ஒரு கையில் வழங்கி மறு கையில் வழங்கியதை பெறும் தன்மையே காணப்படுகிறது.பெருந்தோட்ட மக்களின் சம்பள உயர்வு கோரிக்கை தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.அரசாங்கம் நினைத்தால் அவர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கலாம்.ஆனால் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.போலியான வாக்குறுதிகள் மாத்திரம் வழங்கப்படுகின்றன.ஆகவே மக்களுக்கு பயனளிக்காத வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்

No comments: