News Just In

11/21/2023 08:05:00 PM

இளைய சகோதரனை கொலை செய்ய கப்பம் : மூத்த சகோதரனும் தந்தையும் கைது!




தனது இளைய சகோதரனை கொலை செய்வதற்காக அவரது மூத்த சகோதரர் 60 ஆயிரம் ரூபா கப்பம் வழங்கிய சம்பவம் ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கத்தியால் குத்தப்பட்ட இளைய சகோதரன் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தந்தை, மகன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய தந்தை மற்றும் 21 வயதுடைய மகன் ஆவர்.

தங்களது பெற்றோரின் சொத்துக்களை சமமாகப் பகிர்ந்தளிக்காமை காரணமாக இரு சகோதரர்களுக்கும் இடையிலான தகராறே இந்தச் சம்பவத்துக்கு காரணம் என தெரிய வருகிறது.

இளைய சகோதரர் ஹோமாகம ஹிரிபிட்டிய பிரதேசத்தில் பாடசாலை உபகரண விற்பனை நிலையமொன்றை நடத்தி வரும் நிலையில் அவர் விற்பனை நிலையத்தில் இருக்கும்போது முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத மூவர் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அருகில் இருந்த நபர் தாக்குதலை தடுக்க முற்பட்ட போது சந்தேக நபர்கள் அவரையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: