News Just In

11/04/2023 07:08:00 AM

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் உடனடியாக பதவி விலக வேண்டும் : அமைச்சர் ரொஷான் ரணசிங்க

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கோரியுள்ளார்.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியாவிடம் 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி நேற்று முன்தினம் அடைந்த தோல்விக்கு, தேசிய தேர்வாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு பதவியில் இருக்க தார்மீக, நெறிமுறை உரிமை இல்லை. எனவே அவர்கள் பதவி விலக வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

ஏஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் தினேஷ சந்திமால் போன்ற மூத்த துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெறாதது இலங்கையின் உலக கிண்ண போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தேர்வாளர்களையும் அதன் செயற்குழுவையும் இலங்கை கிரிக்கெட் பாதுகாப்பது ஒரு நகைச்சுவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிய தனியான கடிதத்தில், பந்தயம் மற்றும் சூதாட்ட நிறுவனங்களுடன் தொடர்புள்ள வர்த்தகநாமங்களுடனான இலங்கை கிரிக்கெட்டின் தொடர்பை அமைச்சர் எடுத்துக்காட்டியுள்ளார்.

'லங்கா பிரீமியர் லீக்கில்' பந்தயம் மற்றும் சூதாட்டம் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.



எனவே இதுபோன்ற நிறுவனங்களை லங்கா பிரீமியர் லீக்கில் பங்கேற்க அனுமதிக்கும் அமைப்பின் முடிவு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது, அதே நேரத்தில் தொடர்புடைய நடவடிக்கைகளை ஊக்குவிப்பது சட்டங்களுக்கு சட்டவிரோதமானது என்றும் அமைச்சர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: