News Just In

11/09/2023 05:01:00 PM

நியூஸிலாந்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!




நியூஸிலாந்தின் தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியொன்றில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதனை கைகளால் தொட்டு ஆராய்ந்து பார்க்க அண்மையில் அங்கு சென்றிருந்த இலங்கையைச் சேர்ந்த குழுவினருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

குறித்த மணி 15ஆம் நூற்றுண்டுக்கும் 18ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்துக்குரியது என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள்.

நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பாய்மரக் கப்பல் புயலில் சிக்குண்டு அதன் சிதிலங்கள் கரை ஒதுங்கிய போது ஒரு மரத்தின் வேர்களுக்குள் குறித்த மணி சிக்குண்டிருந்தது.

வெண்கலமணியைக் கண்டெடுத்த நியுஸிலாந்தின் ஆதிக்குடிகளான மெளரி இன மக்கள் அது என்னவென்று தெரியாமல் உணவு தயாரிக்க இதனடியில் நெருப்பு மூட்டி உருளைக் கிழங்குகளை அவிப்பதற்குப் பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலத்தின் பின்னர் 1899ஆம் ஆண்டு இதனைக் கண்டெடுத்த வரலாற்று ஆய்வாளர் வில்லியம் கொலென்ஸோ (William Colenso) இந்த வரலாற்றுச் சின்னத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

166mm உயரமும், 155mm சுற்றளவும் கொண்ட இந்த மணியில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் எந்த மொழிக்குரியவை? எந்த நாடு எனக் கண்டுபிடிப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியில் இது தமிழ்மொழி என்பதுவும் அந்த நாளில் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றான நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு வந்த கப்பலின் மணி என்பதுவும் தெரியவந்துள்ளது.

இந்த மணியில் இப்போதும் தெளிவாகத் தெரியும் வகையில் பொறிக்கப்பட்டுள்ள வரி- முகைய்யத்தீன் பாகசுடைய கப்பல் மணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாணிபத்தில் சிறந்து விளங்கிய நம் தொன்மைத் தமிழரின் அடையாளக் குறியீடாக தமிழ் எழுத்துகளைக் கண்ணுற்ற போது பெருமையாக உள்ளது என இலங்கையைச் சேர்ந்த குழுவினர் தெரிவித்தனர்.

No comments: