News Just In

10/24/2023 03:34:00 PM

சாணக்கியன் எம்.பியின் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தஞ்சம்!




மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சுமார் 8 கோடி ரூபாவினை போலி முகவர்களின் ஆசைகளை நம்பி இழந்துள்ளதாகவும் தற்போது நிர்க்கதிக்குள்ளான எம்மை காப்பாற்றுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினரிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.

திங்கட்கிழமை (23) மாலை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு வந்திருந்த குறித்த பணத்தை இழந்தவர்கள், சுமார் பல மணித்தியாலங்கள் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து தத்தமது பிரச்சினைகளை முன்வைத்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது,

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு என கூறி 185 பேரிடம் 8 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி அரச உத்தியோகத்தில் உள்ள சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு உடந்தையாக பாடசாலை மாணவன் ஒருவரும் உள்ளடங்குவதாக அறிகின்றேன். தற்போது இவ்விடயம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கலந்துரையாடினேன்.

பாதிக்கப்பட்ட மக்கள் என்னை இதற்கான உரிய நீதியினை பெற்றுத் தரும்படி எனது அலுவலகத்தில் சந்தித்திருந்தார்கள். தற்பொழுது இவ்வாறான மோசடிகள் அதிகளவாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஏமாற்றுக்காரர்கள் இடம் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும் என தெரிவித்தார்.

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் 188 பேரை தேர்ந்தெடுத்திருந்தார்கள். இதில் டுபாய்க்கு 146 பேரும் டென்மார்க்கிற்கு 20 பேரும், தாய்லாந்துக்கு 22 பேரும் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

அத்துடன், டுபாய் நாட்டிற்கு செல்பவர்களிடம் 350,000 ரூபாவும் டென்மார் நாட்டிற்கு செல்பவர்களிடம் 550,000 ரூபாவும் தாய்லாந்து நாட்டிற்கு செல்பவர்களிடம் 4 முதல் 5 இலட்சம் வரைபணம்வாங்கியுள்ளனர்.மொத்தமாக 188 பேரிடம் அண்ணளவாக 7 அரை கோடி ரூபாவினை மோசடி செய்துள்ளனர் என பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.



No comments: