News Just In

8/24/2023 05:09:00 PM

சம்மாந்துறை தொழில்நுட்ப மாணவர்கள் பஸ் தரிப்பு நிலையத்திற்கு மேல் நின்று ஆர்ப்பாட்டம்!



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இன்று (24)காலை 8.30 மணி முதல் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பு நிலையத்தின் கூரையின் மேல் நின்று கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும், அதிபருக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20 மாணவர்கள் பங்கு கொண்டிருப்பதனை எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

வெளி மாவட்டங்களில் இருந்தும், தூரப் பிரதேசத்தில் இருந்தும் வருகை தந்து சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் கற்கை நெறிகளை கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு போதிய விடுதி வசதிகள் கிடையாது.

பெண் மாணவிகள் வெளியிடங்களில் வாடகைக்கு தங்கிக் கொண்டிருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண் மாணவர்களுக்கு தங்குவதற்குரிய விடுதி ஒன்று இருக்கின்ற போதிலும், அதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கின்றார்கள்.

மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. தூங்குவதற்கு கட்டில்கள் இல்லை. மாணவர்கள் நிலத்தில்தான் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு குளியல் அறையும், மலசல கூடமும் கிடையாதென்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மேலும், கல்லூரியில் வேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தாலும் சுகயீனமடையும் மாணவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு இந்த வாகனம் பயன்படுத்தப்படுவதில்லை. சுகயீனமடையும் மாணவர்களின் சொந்த செலவிலேயே முச்சக்கர வண்டிகளில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மாணவர்களிடம் இருந்து ஐந்து ஆயிரம் ரூபா பணம் அறவீடு செய்யப்பட்டது. இந்த பணத்தைக் கொண்டு மாணவர்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து தரப்படவில்லை. அந்தப் பணத்திற்கு என்ன நடந்ததென்று கூட தெரியவில்லை என்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஆனால் மேற்படி குறைபாடுகளை கல்லூரியின் அதிபர் கவனத்திற்கொள்வதில்லை. எங்களின் இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம் என மாணவர்கள் கூறுகின்றனர்.

இதே வேளை, மாணவர்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அதிபர் எஸ்.தியாகராஜாவை நாம் சந்தித்த போது பின்வருமாறு தெரிவித்தார்.

மாணவர்கள் எந்தவொரு முன் அறிவித்தலும் இன்றி கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை எழுத்து மூலமாக அறிவிக்கும் பட்சத்தில் அதற்குரிய நடவடிக்கைகளை எமது மேல் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆண் மாணவர்களுக்கு விடுதி வசதி உள்ளன. அங்கு எல்லா வசதிகளும் உள்ளன எனவும் தெரிவித்தார்.

இதே வேளை, நாம் மாணவர் விடுதியை பார்வையிட்ட போது அங்கு பல குறைபாடுகள் உள்ளதைக் காணக் கூடியதாக இருந்தன. மாணவர்களுக்கு சமையல் அறை, முறையான குளியல் அறை கிடையாது. மாணவர்கள் நிலத்தில்தான் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். விடுதியின் ஒரு பகுதியில் கதவுகளில்லை. அறைகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால், மாணவர்களுக்கு பாதுகாப்பும் குறைவாகவே இருக்கின்றது.




No comments: