News Just In

5/09/2023 07:58:00 AM

பிராய்லர் கோழி சாப்பிடலாமா? இலங்கை மருத்துவர் அளித்த விளக்கம்!

பிராய்லர் கோழி சாப்பிடலாமா வேண்டாமா? அதன் முட்டையை சாப்பிடலாமா? என்பதே தற்போது வரை நாளாந்தம் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வியாக உள்ளது.

இது தொடர்பில் பொது நல மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா என்பவர் அளித்துள்ள பதில்,
இந்தக் கோழி ஆண் கோழியுடன் இணை சேராமலே வெறுமனே பெண் கோழிகளே வளர்க்கப்படுகின்றன. அவற்றில் இருந்து கிடைக்கும் முட்டைகளும் மலட்டுத்தன்மை உடையவை, ஆகவே பிராய்லர் கோழி கறியையும் லேயர் கோழி முட்டையையும் தவிர்க்க வேண்டும் என்ற வாதம் வைக்கப்படுகிறது.

முதலில் முக்கியமான ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பிராய்லர் என்பது அதன் கறிக்காக வளர்க்கப்படும் கோழி இனம் லேயர் என்பது அதன் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழி இனம், பொதுவாகவே கோழி மற்றும் இதர பறவை இனங்கள் ஆணுடன் இணை சேராமலேயே இயற்கையாகவே முட்டையிடும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.
அதாவது ஒரு மனிதப் பெண் குழந்தை பெற கட்டாயம் ஆணின் விந்து தேவை, ஆனால் ஒரு கோழி முட்டையிட சேவலுடன் இணை சேர வேண்டிய அவசியம் இல்லை அதன் மாதவிடாய் மூலம் முட்டை வெளியேறிக் கொண்டே இருக்கும் அதனால் சில தினங்களுக்கு ஒரு முறை பெண் கோழி முட்டை போட்டுக் கொண்டே இருக்கும்.

ஆணுடன் இணை சேராமல் போடும் முட்டை - குஞ்சு பொரிக்காது சேவலுடன் இணைந்து பொரிக்கும் முட்டை குஞ்சு பொரிக்கும் இந்த அடிப்படை இயற்கையே நம்மிள் பலருக்கும் தெரியாமல் இருக்கும் என்பதால் டாக்டர் இதனை விளக்கியுள்ளார்.

சரி பிராய்லர் கறியைப் பொருத்தவரை அது குறைந்த நாட்களில் தீவனத்தை உண்டு உடல் எடை கூடுமாறும் கறி நன்றாக ஏறுமாறும் உருவாக்கப்பட்ட கலப்பினமாகும்.

இதன் இயற்கையே நன்றாக கொழு கொழுவென வளர்ந்து எடை போடுவது வளர்ப்பவர்க்கு குறைவான தீவனத்தில் நிறைவான கறி கொடுப்பது இதை FEED CONVERSION RATE என்பார்கள் ( தீவனம் கறியாக/ முட்டையாக மாறும் விகிதம்) எப்படி மனிதக் குழந்தைகளுக்கு உயிருக்கு ஊறு விளைவிக்கும் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க தடுப்பூசிகள் செலுத்தபடுகின்றனவோ அது போலவே கோழிகளுக்கும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
எப்படி மனிதர்களுக்கு சளி இருமல் நுரையீரல் தொற்று ஏற்பட்டால் ஆண்டிபயாடிக் மருந்து வழங்கப்படுகிறதோ அது போலவே கோழிகளுக்கும் தொற்று ஏற்படும் போது ஆண்டிபயாடிக்குகள் வழங்கப்படுகின்றன.

ஆனால் புரளி பரப்பப்படுவதைப் போல ஒவ்வொரு கோழியாகப் பிடித்து நன்றாக புஷ்டியாக மாற ஹார்மோன் ஊசிகள் போடப்படுவதில்லை. இதற்குக் காரணம் ஹார்மோன் ஊசிகள் விலை மதிப்பானவை. அவற்றை ஒவ்வொரு கோழிக்கும் போட்டு அவற்றை எடை கூட்டினால் மகசூலை விட முதலின் பொருளாதாரம் கூடிவிடும்.

எனவே பிராய்லர் கோழிப் பண்ணைகளில் ஹார்மோன் ஊசி போட்டு கோழியை பெரிதாக வளர்ப்பதில்லை மாறாக கோழிகள் உடலுக்கு வேலை இன்றி நின்ற இடத்திலேயே இருந்து சத்து மிகுந்த தீவனங்களை உண்பதாலும் நோய் நொடியின்றி வளர்வதாலும் கறி நன்றாக வைக்கிறது.

என்னை சந்திக்க வரும் பிசிஓடி எனும் சினைப்பை நீர்க்கட்டி நோயால் பாதிக்கப்பட்ட உடல் பருமனான மங்கைகளுக்கு அவர்கள் ப்ராய்லர் கோழிக் கறியை ஒரு வேளை உணவாக பேலியோ உணவு முறையில் பரிந்துரைத்து அவர்கள் உடல் எடை குறைந்து அதன் மூலம் பிசிஓடி கட்டுக்குள் வந்ததை உணர்ந்துள்ளேன்.

நாம் தவறாக நினைப்பது போல பிராய்லர் கோழியில் ஹார்மோன்கள் இருக்குமானால் எப்படி பெண்களின் ஹார்மோன் கோளாறான பிசிஓடி கட்டுக்குள் வரும்? மேலும் நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளான பலருக்கும் உடல் பருமன் நோய்க்கு உள்ளான பலருக்கும் ப்ராய்லர் கோழி கறி உண்ணக் கொடுத்து அதன் மூலம் சிறந்த பலன்களை அறிய முடிகின்றது.

பிராய்லர் கோழியைப் பொருத்தவரை எளிதாகக் கிடைக்கிறது, ஏழை எளியவர் முதல் நடுத்தர பொருளாதாரத்தினர் தொடங்கி வசதி வாய்ப்பிருப்பவர்கள் வரை அனைவருக்கும் விலை குறைந்த புரதச்சத்தை வழங்கும் உணவாக இருக்கிறது.

குறிப்பாக ஏழைகளாலும் நடுத்தர மக்களாலும் நாட்டுக் கோழியை அதிக விலை கொடுத்து உண்ண முடியாது. மட்டனை அதிக விலை கொடுத்து உண்ண முடியாது. அப்படி இருக்கும் போது அவர்களின் வீடுகளுக்கும் அவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் புரதச்சத்து கிடைக்க எளிமையான ஏற்பாடாக பிராய்லர் கோழி உள்ளது.

இந்த காரணத்திற்காக பிராய்லர் கோழி குறித்த வதந்திகள் தவறான கருத்துகள் பரவும் போது அதற்கு மாற்றுக் கருத்தை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

பிராய்லர் கோழியால் பெண் பிள்ளைகள் விரைவில் பூப்பெய்துகிறார்கள் என்ற வாதத்திலும் உண்மையில்லை மாறாக அதிக மாவுச்சத்து அதிக இனிப்பு சாப்பிட்டு உடல் உழைப்பின்றி இருப்பதே உடல் பருமனுக்கும் மாதவிடாய் சீரற்ற தன்மைக்கும் காரணமாக இருக்கிறது.

பெரும்பான்மை மக்கள் உண்ணும் உணவு குறித்து தேவையற்ற பரப்பி விடப்படும் மூடநம்பிக்கைகளை நம்பி ஏழை வீட்டுக் குழந்தைகள் புரதச்சத்தின்றி உடல் எடை மெலிந்து நலிவுற்றுக் காணப்படுகின்றனர்.

பணம் படைத்தவர்கள் நாட்டுக் கோழி உண்பதில் எந்த பிரச்சனையும் இல்லை அவரவருக்கு உகந்ததை அவரவர் உண்ணட்டும் ஆனால் அனைவரும் உண்ணக்கூடிய உணவு குறித்து நாம் அவதூறு பரப்பாமல் இருந்தாலே நலம் என பொது நல மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.No comments: