News Just In

5/18/2023 04:35:00 PM

இன மத பேதங்களைக் கடந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து விநியோகம்!





--- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இழப்புக்களையும் துயரங்களையும் மன வடுக்களையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும் முகமாகவும் இனி இவ்வாறானதொரு இழப்புக்கள் துயரங்கள் மனவடுக்கள் ஏற்படக்கூடாது என்பதையும் வலியுறுத்தி ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவ மக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து துயரங்களைப் பரஸ்பரம் பறிமாறிக் கொண்டனர்.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு அதன் பணிப்பாளர் எம்.எல்.எம். புஹாரி தலைமையில் மட்டக்களப்பு பிள்ளையாரடி மன்றேசா பயிற்சி தியான இல்லத்தில் வியாழக்கிழமை 18.05.2023 இடம்பெற்றது.

நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு உட்பட கடந்த மூன்று தசாப்த கால ஆயுத முரண்பாடுகளின் விளைவாக பாதிக்கப்பட்ட ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவ சமூக மக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சமயப் பெரியார்கள். தன்னார்வ அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்பட கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின்; திட்ட முகாமையாளர் ரீ. றேணுகா தேவி, திட்ட அலுவலர் ஸ்ரீயானி ஜோசெப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அங்கு முள்ளிவாய்க்கால் உள்ளடங்கலாக கடந்த கால யுத்தத்தின்போது பலியான உறவுகளுக்காக அகல் விளக்கேற்றப்பட்டு மலர்கள் தூவப்பட்டதுடன் மதப் பெரியார்களின் பிரார்த்தனைகள், கஞ்சி விநியோகம், கலைக் குழுவினரின் நம்பிக்கைப் பாடல் என்பனவும் ஈற்றில் மரணித்தோர் நினைவாகவும் இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கிலும் மரநடுகையும் இடம்பெற்றது.




No comments: