News Just In

4/12/2023 11:28:00 AM

விவசாயிகள் அடிமைகளாகும் அபாயம்: விவசாய சம்மேளனம் எச்சரிக்கை!

பசளையை விநியோகிக்கும் பணியில் இருந்து அரசாங்கம் விலகி தனியாரிடம் பணியை ஒப்படைப்பது விவசாயிகள் தனியார் நிறுவனங்களின் அடிமைகளாக மாறுவதற்கான முதல் படியாக அமையும் என வன்னி மண்ணின் விவசாயத் தலைவர் முத்து சிவமோகன் எச்சரித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு பெரும்போகத்தில் பசளை விநியோகப் பணியிலிருந்து அரசாங்கம் விலகி, பணியைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அண்மையில் வெளியிட்ட அறிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் (11.04.2023) கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, இரசாயன பசளைகள், சேதனப் பசளைகள், விதைகள் மற்றும் இதர விவசாய உள்ளீட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு விவசாயிகளுக்கு நிதி நிவாரணங்கள் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள அரசாங்கம், நாட்டை கடன் சுமையிலிருந்து விடுவிப்பதற்காக அரச நிறுவனங்களை விற்பதற்கும் தனியார் மயமாக்குவதற்கும் தயார் என ஏற்கனவே அறிவித்துள்ளது.

விவசாயிகளின் அனைத்து பொறுப்புகளையும் அரசாங்கம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கினால், உற்பத்தி செயன்முறை மாத்திரமல்ல, சந்தைப்படுத்தல் குறித்தும் அந்த நிறுவனங்கள் முடிவுகளை எடுக்கும்.

அதைத் தவிர, இந்த நாட்டில் எந்தளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானிப்பார்கள், எங்கள் பொருளின் விலையை அவர்கள் நிர்ணயிப்பார்கள். தயாரிப்பு நுகர்வோர் சந்தைக்குச் செல்லும்போது, அவர்களே அந்த விலையையும் தீர்மானிப்பார்கள்.

விவசாயம் தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் எடுக்கும் உரிமை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் எதிர்காலத்தில் நிலத்தின் மீதான உரிமையை விவசாயிகள் இழக்க நேரிடும் என எச்சரித்துள்ள என விவசாயிகள் சங்கத் தலைவர், எதிர்காலத்தில் விவசாயிகள் தனியார் நிறுவனங்களின் கீழ் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் இலங்கைப் படையெடுப்பின் பின்னர், அவர்களின் நிறுவனங்கள் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி 400 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையர்களை அடிமைப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார்மயக் கொள்கை குறித்து அரசாங்கம் ஆழமாகச் சிந்திக்கவில்லையெனில் அது நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ள விவசாயத் தலைவர் முத்து சிவமோகன், இதுத் தொடர்பில் அரச அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், அரசியல்வாதிகள் அவதானமாகச் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.


2020ஆம் ஆண்டு அரசாங்கம் மேற்கொள்ளும் விவசாயச் சீர்திருத்தங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் எதிர்காலத்தில் இலங்கையிலும் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் முத்து சிவமோகன் எச்சரித்துள்ளார்.

மேலும், 2020, நவம்பரில் பண்ணை விளைபொருட்களின் விற்பனை, விலை நிர்ணயம் மற்றும் சேமிப்பு ஆகியவற்றில் விதிகளைத் தளர்த்தும் மூன்று சட்டங்களை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியதை அடுத்து இலட்சக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய விதிகளால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விவசாய வணிகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாகக் கட்டுப்பாட்டு விலையில் விற்குமாறு கட்டாயப்படுத்தும் என்பது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

புதிய விதிகள் விவசாயிகளுக்கு அதிக இலாபம் தரும் என அரசாங்கம் கூறியது, ஆனால் இந்த விதிகள் பெரிய நிறுவனங்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை வழங்கும் என இந்திய விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: