இலங்கையில் லிஸ்டீரியா எனப்படும் நோய் தொற்று தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை என தொற்று நோய் தடுப்புப்பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டில் இந்த நோய்த்தொற்று பரவும் அபாயம் கிடையாது எனவும், இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு மக்கள் லிஸ்டீரியா குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும் நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பிரதான தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவி்க்கையில், இவை பக்டீரியாவினால் ஏற்படும் லிஸ்டீரியா என்ற நோயாகும். இது பெரியளவில் தொற்றுநோயாக பரவாது.நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும்.இது பொதுவாக உணவு மூலம் நபருக்கு நபர் பரவுகின்றது.
ஆரோக்கியமான மக்கள் எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டமாட்டார்கள் அத்துடன், சிக்கல்கள் அரிதாகவே ஏற்படலாம். குறிப்பாக கர்ப்பிணிகள், புற்றுநோய், சிறுநீரக நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், நீண்டகால நோய்கள் உள்ளவர்கள். நோயெதிர்ப்பு குறைவாக உள்ளவர்களுக்கு இது சிக்கல்களை ஏற்படுத்தும்.
பெப்ரவரி கடைசி வாரத்தில் இலங்கையில் இருந்து முதல் நோயாளி பதிவாகியிருந்தார். அவர் நடுத்தர வயதுடையவர். அவருக்கு சிக்கல்கள் ஏற்பட்டு மூளைக் காய்ச்சலால் இறந்தார். இந்த மரணம் லிஸ்டீரியாவால் ஏற்பட்டதாக நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
இதனை தவிர, இலங்கையில் நோயாளிகள் எவரும் இருப்பதாகத் தகவல் இல்லை. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில், எந்த அறிக்கையும் லிஸ்டீரியா என சந்தேகிக்கும் நோயாளிகள் கண்டறியப்படவில்லை. அதனால்தான் லிஸ்டீரியா பரவும் அபாயம் இல்லை.
வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி மற்றும் உடல் வலி போன்றவை லிஸ்டீரியாவின் அறிகுறிகளாகும்.எனவே உட்கொள்ளும் உணவு மற்றும் நீர் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments: