News Just In

3/08/2023 11:03:00 AM

மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி செயலகம் அம்பாறை அரசாங்க அதிபரை பணிப்பு !




மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி தொடர்பில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர் ஜனாதிபதிக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் முன்னுரிமை அளித்து, இந்த விஷயத்தை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் அம்பாறை அரசாங்க அதிபரை எழுத்துமூலம் பணித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயங்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமருக்கும், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் சீ.ஏ. சுனித் லோச்சணவுக்கும் அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு பிரதேச ஜனாஸா மையவாடி கடலரிப்புக்குள்ளாகி பாவிக்க முடியாத நிலைக்கு நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. உடனடியாக மாற்று இடத்தில் புதிய ஜனாஸா மையவாடியை அமைக்கவேண்டிய தேவை உள்ளதால் உடனடியாக புதிய காணியொன்றை இதற்காக பெறவேண்டியுள்ளது. இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுத்து புதிய காணியொன்றை வழங்குமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர், காணியமைச்சர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர், அம்பாறை அரசாங்க அதிபர், காரைதீவு மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு மாளிகைக்காடு அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர் கடந்த மாதம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

மேற்படி அரச முக்கியஸ்தர்களுக்கு முன்வைத்த கோரிக்கையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிராம மக்களின் ஜனாஸா மையவாடி கடலரிப்பில் முழுமையாக சேதமாகியுள்ளதுடன், ஜனாஸாக்கள் கடலில் அள்ளுண்ட போன வரலாறுகளும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் விதமாகவே ஜனாதிபதி செயலகம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு இந்த பணிப்பை விடுத்துள்ளது. இது தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயம் துரித கெதியில் முன்னெடுக்கும் என நம்பப்படுகிறது.


No comments: