News Just In

3/14/2023 08:22:00 PM

மாநகர ஆணையாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் வசமாகும் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம்!




உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக்காலம் தொடர்பில் அறிவிக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த ஆணைக்குழு அறிவித்துள்ளது, ஆனால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் எந்த திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை.

ஏப்ரல் 25 தேர்தல் இடம்பெற்றால் 2024.01.01ஆம் திகதியில் இருந்து தான் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆரம்பமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வகும்பர பாராளுமன்றத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற 'சர்வஜன வாக்குரிமை'தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவி காலம் தொடர்பில் சகல தரப்பினருடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன தீர்மானித்துள்ளதாகவும்,தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆரம்பமாகும் திகதி தொடர்பில் சிறந்த அறிவிப்பை விடுக்குமாறு தேசிய தேர்தலகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வகும்பர தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இழுபறி நிலையில் உள்ளதன் பின்னணியில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் காலி மாவட்டம் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத்தை தவிர ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் நிறைவடையும்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அரச சொத்துக்கள் மற்றும் அரச வாகனங்கள் அனைத்தும் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் உரிய அரச நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு சகல உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

பதவி காலம் நிறைவடையும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் மற்றும் நிர்வாகம் மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு பொறுப்பாக்கப்படும்

No comments: