News Just In

3/14/2023 07:04:00 PM

மட்டக்களப்பு - நொச்சிமுனையில் ஒலி சமிக்ஞை கடவை விளக்கு அமைக்க திட்டம் !


மட்டக்களப்பு நொச்சிமுனையில் அமைந்துள்ள உதயம் விழிப்புலனற்றோரின் வேண்டுகோளின் பிரகாரம் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கெளரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஏற்பாட்டில் கல்லடி - நொச்சிமுனையிலுள்ள விபுலானந்த அழகியற்கற்கை கல்லூரிக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் ஒலி சமிக்ஞை கடவை விளக்கு அமைப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று (14.03.2023) மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் இடம்பெற்றதோடு மற்றும் அதனை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தினை கண்டறியும் களப்பரிசீலனையும்  இடம்பெற்றது.

கடந்த சில காலங்களாக உதயம் விழிப்புலனற்றோர் அமைப்பிலுள்ளவர்கள் விபுலானந்த அழகியற்கற்கை கல்லூரிக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியினை கடப்பதில் பெரும் சிரமத்தினை எதிர்நோக்குவதோடு பல வீதி விபத்துக்களையும் சந்தித்துள்ளனர். இதனடிப்படையில் உதயம் விழிப்புலனற்றோர் அமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கெளரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மேற்படி ஒலி சமிக்ஞை கடவை விளக்கு அமைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். அதனை அமுல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் மற்றும் களப்பரிசீலனை என்பன இன்று இனிதே நிறைவேறியது. மேற்படி திட்டமானது நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் உதயம் விழிப்புலனற்றோர் அமைப்பிலுள்ளவர்கள் எந்தவித விபத்துகளையும் எதிர்நோக்காமல் பாதுகாப்பான முறையில் பாதையினை கடக்கமுடிவதோடு விபுலானந்த அழகியற்கற்கை கல்லூரியில் கல்விபயிலும் மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகளும் பாதுகாப்பான முறையில் பாதையினை கடக்க உதவும்.

மேற்படி நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர், உதயம் விழிப்புலனற்றோர் சங்க பிரதிநிதிகள் மற்றும் தரிசனம் விழிப்புலனற்றோர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.







No comments: