News Just In

3/02/2023 01:35:00 PM

கல்முனை மாநகர சபை நிதிமோசடியில் முதலைகளை தப்பவிட்டு பல்லிகளை மட்டும் கைது செய்வது நியாயம் இல்லை : மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சிபான்.




நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகரசபையின் ஆட்சியதிகாரம் காலாதிகாலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமே உள்ளது. "பலநாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான்" என்பது போல அவர்களின் ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற ஊழல்கள் இப்போது ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளது. இது தொடர்பில் கடந்த காலங்களில் சபை அமர்வுகளிலும், ஊடகங்களிலும் கல்முனை மாநகர சபை உறுப்பினரான நாங்கள் சிலர் சுட்டிக்காட்டி இந்த ஊழல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரினோம். அது நடக்கவில்லை. இப்போது தலைக்கு மேலாக வெள்ளம் சென்று முழ்கும் நிலையில் மாநகர சபை நிர்வாகத்தினர் ஒப்பாரி வைக்கிறார்கள் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சிபான் பஹுறுத்தீன் தெரிவித்தார்.

நேற்று (01) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ராஜபக்ஸக்களின் ஊழல் குட்டு வெளிப்பட்ட போது ஒட்டு மொத்த நாட்டு மக்களும் ஒன்று திரண்டு வெளிப்பட்டு ஊழல்வாதிகளை விரட்டியடித்தது போன்று கல்முனையிலே ஆளும் முஸ்லிம் காங்கிரஸினை விரட்டியடிக்க ஒன்றுபட வேண்டும். "பாத்திமா செய்தால் கையை வெட்டுவதும், பாரூக் செய்தால் மோதிரம் போடுவதும் என்ற நிலைப்பாடு மாறி , எவர் செய்திருப்பினும் ஊழல் ஊழல்தான் எனும் ஒற்றை நிலைப்பாட்டினை சமூகம் எடுக்கின்ற போதுதான் ஊழலற்ற நிர்வாகம் ஒன்றை இந்த மாநகரில் நிறுவ முடியும் என்றார்.

தொடர்ந்தும் ஊழல் நடைபெறுவதை பல வருடங்களாக அறிந்திருந்தும், அவர்களுடன் ஒட்டிஉறவாடி அவர்களின் போக்குகளுக்கு மௌனமாக இருந்து ஆதரவு கொடுத்து, அவர்களின் செயற்பாடுகளை கண்டும் காணாமல் இருந்துவிட்டு இப்போது ஊழல்கள் வெளிவர ஆரம்பித்தவுடன் கொதித்தெழுந்து இப்போதுதான் எல்லாம் தெரிந்தவர்கள் போன்று பாசாங்கு செய்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், போன்ற மு.கா முக்கியஸ்தர்கள் பலரும் சம்பவம் தொடர்பாக வெளியிடும் அறிக்கைகளை பார்க்கின்ற போது வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கிறது. வெறுமனே இந்த நூதனத் திருட்டுக்கு எளியவர்கள் இருவரை மாத்திரம் பலிக்கடாவாக்கி தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் தனது கட்சியையும் அரசியலையும் தக்கவைக்க தனது அறிக்கையில் படாத பாடுபட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

கல்முனை மாநகரசபையில் எவர் ஊழல் செய்திருப்பினும் தயவு தட்சண்யம் பாராமல் சட்டத்தின் முன்னால் நிறுத்துவதே தர்மமாகும். மிகப் பெரிய நிதிமோசடியில் சம்மந்தப்பட்ட முதலைகள் தப்ப இடம் வைத்து பல்லிகளை மட்டும் குறைகூறுவதில் நியாயம் இல்லை.மேலும் ஊழலுடன் சம்மந்தப்பட்டவர்களை தேர்தல் காலத்தில் உறுப்பினராகத் தெரிவதனால் வரும் விளைவுகளில் இவ்வாறான திருட்டுக்களும் ஒன்றென்பதனை மக்கள் புரிய வேண்டும். எவரொரருவர் ஊழல் செய்து அரசியலுக்குள் அடியெடுக்கிறாரோ அவர் மீண்டும் மீண்டும் மக்களுக்கு பகிர்ந்து கொடுக்கவே மக்கள் வரிப்பணங்களை திருடுகிறார் என்பதனை புரிந்து இவ்வாறானவர்களையும் அவர்கள் சார்ந்த கட்சியையும் மக்கள் புறக்கணிக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.


No comments: