News Just In

2/02/2023 09:54:00 AM

பிரதி பொலிஸ் மா அதிபர் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம்; டென்னிஸ் விளையாட்டரங்கு அமைக்க உறுதி; பொறியியலாளர் பர்ஹானின் ஏற்பாடு!




நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ அவர்கள் கல்முனை ஸாஹிறாவிற்கு விஜயம் செய்து கல்லூரியில் டெனிஸ் விளையாட்டரங்கை அமைக்க முன்னிற்கப் போவதாக உறுதியளித்துள்ளார்.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் டெனிஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி, மேம்படுத்துவது குறித்தும், அதற்காக டெனிஸ் விளையாட்டரங்கொன்றினை கல்லூரியில் அமைப்பது குறித்தும் கலந்துரையாடுவதற்காக, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திரு. தமயந்த விஜயஸ்ரீ அவர்கள் கல்முனை ஸாஹிறாக் கல்லூரிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இலங்கை டெனிஸ் சங்கத்தின் (Sri Lanka Tennis Association) உறுப்பினர் என்ற வகையில், அம்பாறை மாவட்டத்தின் முன்னணி பாடசாலைகளுள் ஒன்றாகிய கல்முனை ஸாஹிறாவில், டெனிஸ் விளையாட்டரங்கினை அமைப்பதில் தான் முன்னின்று செயலாற்றவுள்ளதாகவும், இதற்காக இலங்கை டெனிஸ் சங்கத்தின் ஒத்துழைப்பு பெறப்படுமெனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

கல்லூரியில் இதற்கான இடத்தை அடையாளம் காண்பது தொடர்பிலும், இதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலுமான முதற்கட்டக் கலந்துரையாடல் கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்தும் அடுத்த கட்டக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, விரைவில் கல்லூரியில் டெனிஸை அறிமுகப்படுத்துவதென பிரதிப் பொலிஸ்மா அதிபர் உறுதியளித்தார்.

அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியேட்சகர், கல்முனை பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும், கல்லூரியின் பிரதி அதிபர்கள், முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பாடசாலை பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விளையாட்டரங்கை கல்லூரிக்குக் கொண்டு வருவதற்கான பூர்வாங்க முயற்சிகளை கல்லூரியின் அதிபருடன் இணைந்து, பழைய மாணவர் சங்க உப தலைவர் பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான் அவர்கள் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments: