News Just In

2/18/2023 10:03:00 AM

நவம்பருக்கு முதல் ஜனாதிபதி தேர்தலை நடத்த முயற்சி!

ரணில் விக்ரமசிங்க நவம்பருக்கு முதல் ஜனாதிபதி தேர்தலை நடத்த முயற்சிக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் விளக்க கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது. தேர்தல் எப்போதும் நடக்கலாம். நிச்சயம் நடக்கும். தற்போது தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் காலம் குறிப்பிடவில்லை.

இது ரணில் அரசின் நிகழ்ச்சியாகும். இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்தி மக்களை திசை திருப்ப முனைவதன் ஊடாக தமது அரசியல் நகர்வினை செய்கின்றனர்.

தேர்தலுக்கு காசு இல்லை என்கின்றனர். இவ்வாறான நிலையில் தேர்தல் செலவுக்காக திரும்ப செலுத்தாத தொகையை வழங்கும் நடைமுறை உள்ளது. அதனை திரும்ப செலுத்த வேண்டியதில்லை. இவ்வாறான நிலையில் 500 மில்லியனை IMF கொடுக்கும். இது வழமை.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 341 வட்டாரத்துக்கும் 340 விதமான வாக்குச் சீட்டுக்கள் தயாரிக்க வேண்டும். அது ஒன்றுதான் பெரிய வேலையாகும்.

இதேவேளை, 2 தேர்தலுக்கு அச்சடிக்கக் கூடிய பேப்பர் இருப்பதாகவும் அரச அச்சகம் கூறுகின்றது. அதற்கான கடன் விண்ணப்பத்தை எழுத்து மூலமாக கேட்கிறது.

எனவே இதில் பாரிய அரசியல் நிலவுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதத்தின் பின்பு ஜனாதிபதி தேர்தலை நடத்தக்கூடிய நிலை உள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க நவம்பருக்கு முதல் ஜனாதிபதி தேர்தலை நடத்த முயற்சிக்கிறார்.

இந்த சூழலில் தான் மக்கள் ஆணை பெற்ற ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. இதேவேளை மஹிந்த குடும்பத்துக்கு ரணில் போன்ற ஒருவர் தேவை. அதே போன்று ரணிலுக்கும் அவர்கள் தேவையாக உள்ளது.

சகோதரரை ஜனாதிபதி ஆக்குவதை தவிர்த்து இவ்வாறான ஒருவரை ஜனாதியாக வைத்திருந்தால்தான் தனது மகனை ஜனாதிபதி ஆக்கலாம் என மஹிந்த எண்ணுகின்றார்.

இதே நேரம் பசில் அமெரிக்க பிரஜா உரிமையை நீக்கிவிட்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, பங்குனிக்கு பின் பாராளுமன்றம் கலைக்கப்படலாம். மஹிந்த தரப்பு ரணிலுக்கு பிரச்சினை கொடுத்தால் இவ்வாறான நிலையும் உருவாகும். வரும் பங்குனியுடன் 2 அரை வருடங்கள் முடிகிறது.

தேர்தலை நடத்த அரசால் முடியும். ஆனாலும் ரணிலுக்கு விருப்பமில்லை. அப்படி நடந்தால் ரணில் தோற்பார். அதனாலேயே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகிறது.

மின்கட்டண அதிகரிப்பினால் தொழிற்சாலைகளின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகள் ஆட்களை குறைக்க முயற்சிக்கிறது. பல நிறுவனங்கள் ஆட்களை குறைக்கிறது.

உணவு மற்றும் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. ஏன் இந்த விலையேற்றத்தை செய்கின்றனர். இதனால் சிங்கள மக்களுக்கும் பாதிக்கப்படுகின்றனர்.

இப்போது தேர்தல் வேண்டாம் என மக்களை திருப்புவதற்காகவே இந்த விலையேற்றங்கள். ஆனால் சுதந்திர தினதுக்கு பல கோடி செலவழிக்கின்றனர். யாழிலும் கொண்டாடுகின்றனர். தேசிய கீதம் இசைப்பதற்கு மாத்திரம் கோடிக்கணக்கில் செலவு செய்தனர்.

தேங்காயெண்ணை, சீனியில் கோட்டா பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டார். அதனை வேறு இடங்களில் முதலீடாக்கியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: