
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பெருநிலத்தில் போரதீவுப்பற்று பிரதேசத்தின் பழுகாமத்தில் கடந்த மாதம் 'அபிவிருத்திக்கான பழுகாமம் மாணவர் சங்கம்' எனும் அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. பழைய மாணவர்கள் பலரின் வழிகாட்டலில் இந்த அமைப்பு உருவாக்கம் பெற்றுள்ளது.
இந்த அமைப்பில் பழுகாமத்தில் உள்ள திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயம், பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் மற்றும் திருப்பழுகாமம் மாவேற்குடா விக்கினேஸ்வரர் வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ளனர். மூன்று பாடசாலைகளையும் இணைத்து இந்த அமைப்பு உருவாக்கம் பெற்றுள்ளது.
இந்த அமைப்பு முற்றுமுழுதாக கல்வியினை நோக்கமாகக் கொண்டு செயல்பட உள்ளது. மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்வியை உயர்த்துதல், மக்களிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் மற்றும் க.பொ.த. உயர்தரம், க.பொ.த. சாதாரண தரம், தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தோற்றவுள்ள மாணவர்களுக்காக விசேட செயற்றிட்டங்கள் முன்னெடுத்தல், தொழில் வழிகாட்டல்களுக்கான விழிப்புணர்வு, அரச தொழில் பெறுவதற்கான பயிற்சி வழிகாட்டல் வகுப்புக்கள் போன்ற பணிகளை முன்னெடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பில் மேற்குறித்த பாடசாலைகளில் கல்வி பயின்று ஐக்கிய இராச்சியம், அவுஸ்ரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் பழைய மாணவர்கள், மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் நிமித்தம் சென்றுள்ள பழைய மாணர்கள் மற்றும் இலங்கையில் பல பாகங்களிலும் வாழும் பழைய மாணவர்கள் என பல உறுப்பினர்கள் இதில் அங்கத்துவம் பெறுவதில் ஆர்வமாக உள்ளனர்.
இந்த அமைப்பின் நிர்வாகத் தலைவராக சு.உதயகுமார், செயலாளராக வி.ஆயுஷ்மன், பொருளாராக நா.இந்திரநாதன் இணைத்தலைவராக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள அ.கங்காதரன், இணைச்செயலாளராக அவுஸ்ரேலியாவில் உள்ள ஆ.திருமாவளவன், நிதி ஒருங்கிணைப்பாளராக இரா.பிரபாகரன் ஆகியோருடன் மேலும் பல நிர்வாக உறுப்பினர்கள் இணைந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அமைப்பு தொடர்பாக தலைவர் சு.உதயகுமார் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் 'இந்த அமைப்பானது பழுகாமத்தின் கல்வி அபிவிருத்தியினை செய்வதற்கான ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை. பழுகாமத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்களின் கல்வியினை உயர்த்தி அவர்களுக்கான கல்வி பயில்கின்ற உன்னதமான சூழலை உருவாக்கி அவர்களை சமூகத்தில் ஒழுக்கமுள்ள நற்பிரஜைகளாக வளர்த்து விட வேண்டும் என்பதே இந்த அமைப்பின் முக்கியமான நோக்காக இருக்கும் எனவும், உலகெங்கிலும் பரந்து வாழும் பழுகாமம் பாடசாலைகளின் பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது கிராமத்திற்கு கல்வியினை முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செல்வதற்கு பலம் சேர்த்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், மேலும் இந்த அமைப்பில் இணைந்து கொள்ளாதவர்கள் இணைந்து இந்த அமைப்பிற்கு பலம் சேர்த்து நமது மாணவச்செல்வங்களின் கல்விக்கு கரம் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
திலக்ஸ் ரெட்ணம்
பழுகாமம் நிருபர்
No comments: