News Just In

10/16/2022 08:40:00 PM

70 பில்லியன் நிதி செய்துமுடிக்கப்பட்ட வேலைகளுக்கு அரசு வழங்க வேண்டியுள்ளது. மட்டக்களப்புக்கு மாத்திரம் 2300 மில்லியன் வழங்க வேண்டியுள்ளது.






செய்தியாளர் - ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இலங்கையில் ஒப்பந்த வேலைத்திட்டங்கள் மிகவும் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 1919ஆம் ஆண்டு 19 வீதமாக இருந்த ஜி.டி.பி. தற்போது 6.2 வீதமாகக் குறைவடைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு 242 பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் இருந்தார்கள், 2022 ஆம் ஆண்டு அது 154 பேராகக் குறைவடைந்துள்ளது. அதிலும் 5 தொடக்கம் 6 ஒப்பந்தக்காரர்கள் தான் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இதில் 6000 பேர் அளவில் தொழில் புரிந்து வந்தார்கள் தற்போது அது 500 இற்கு; குறைவானவர்களுக்கே தொழில் வழங்கக் கூடியதாகவுள்ளது. இலங்கையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மாத்திரம் 70 பில்லியன் நிதி செய்து முடிக்கப்பட்ட வேலைகளுக்கு இதுவரையில் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படாமலுள்ளது. மட்டடக்களப்பில் மாத்திரம் இதுவரையில் முடிக்கப்பட்ட வேலைகளுக்கு அனைத்து திணைக்களங்களிலுமிருந்து 2300 மில்லியன் நிதி வழங்கப்படாமலுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள்தான்.

என இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் இராசரெத்தினம் புஜேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அச்சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை செயலாளர் பி.புவனேந்திரபதி, வளவாளர் எஸ்.சிவானந்தன், உள்ளிட்ட அச்சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது அவர் மேலும் கருத்தத் தெரிவிக்கையில்…..

ஒப்பந்தக்காரர்களின் நிலுவைப் பணத்தை அரசாங்கம் விடுவிக்க வேண்டும். இல்லையேல் நிதி நிறுவனங்களால் ஒப்பந்தகாரர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை அரசு குறைக்க முன்வரவேண்டும். ஒப்பந்தகாரர்களால் செய்து முடிக்கப்பட்ட வேலைகளுக்குரிய முழுத் தொகையையும். அதன் வட்டியையும் அரசு பொறுப்பேற்க வேண்டும். 100 மில்லியனுக்கு மேல் நிலுவையுள்ள ஒப்பந்தக்காரர்களுக்கு திறைசேரி முறி வழங்குவதாக நாம் அறிந்தோம், அதனை அனைவருக்கும் வழங்க வேண்டும். எனவே ஒப்பந்தக்காரர்கள் மிவும் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளார்கள், இதனால் அவர்களை தற்கொலைக்குத் தூண்டுவது போன்று காணப்படுகின்றதாக நாம் உணர்கின்றோம்.

இதனால் பலரது தொழில்கள் இல்லாமல் போய்விட்டுள்ளன. தொழில் வாய்பின்மையால் தற்காலத்தில் கொலை கொள்ளைகளும் இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம் தொழில் வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இலங்கையில் அனைத்து வளங்களும் அமைந்துள்ளன. இலங்கையில் இல்லாதது நம்பிக்கையாகும். எனவே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். படித்த சமூகம் மற்றவர்களை சரியாக வழிநடத்த வேண்டும் அது இங்கு மேற்கொள்ளப்படவில்லை.

அரசாங்கத்திற்கு நாம் பல கோரிக்கையை முன்வைத்துள்ளோம் கடந்த யூலை மாதம் எமக்குக் கிடைக்க வேண்டிய நிதியில் 10 வீதமான நிதி மாத்திரமே வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக கிடைத்தது. இதனைவிட எமது கோரிக்கைகளை நாம் மட்டக்களப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதமர், மற்றும் ஜனாதிபதிக்கும் அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.


No comments: