News Just In

9/14/2022 10:36:00 AM

இனவாத அதிகாரிகளாலயே நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது : வட்டமடு காணி மீட்பு குழு செயற்பாட்டாளர் கவிஞர் கால்தீன்




நூருல் ஹுதா உமர்

மதவாதமும், இனவாதமும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை அதாளபாதாளத்துள் தள்ளியுள்ளது என்பதுதான் உண்மை. இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவிருக்கும் விவசாயத்தை செய்கை பண்ண முடியாத ஒரு சூழ்நிலையை இனவாதக் கொள்கையுடைய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பது வேடிக்கையாகவிருக்கிறது என வட்டமடு காணி மீட்பு குழுவின் செயற்பாட்டாளர் பன்நூல் ஆசிரியர் கவிஞர் கால்தீன் தெரிவித்தார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது, உலகத்தில் விவசாயம் செய்கை பண்ணுவதை ஊக்கிவிக்கும் இவ்வேளையில், இலங்கை போன்ற வளமிக்க ஒரு நாட்டில் இனவாதச் சிந்தனையோடு ஏழை விவசாயிகளின் காணிகளை சுவிகரித்து அதைத் தடுப்பது வேடிக்கையாகவிருக்கிறது. இந்த நாட்டின் அபிவிருத்திக்காகவும் எழுச்சிக்காகவும் முஸ்லிம்களின் பங்களிப்பு எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது.

1970 ஆம் ஆண்டிலிருந்து செய்கை பண்ணப்பட்டு வந்த வட்டமடு விவசாயக் காணிகளை விவசாயம் செய்யாமல் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நிலவளமும், நீர்ப்பாசனமும் நிறைந்த காடற்ற இக்காணிகளை மக்களிடம் செய்கை பண்ணக் கொடுப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வு கிடைக்கவில்லை. இந்த அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் தூரநோக்கு சிந்தனை இல்லாத காரணத்தால்தான் இன்று நாடு மிக மோசமான பஞ்சத்தை எதிர் நோக்கி நிற்கிறது.

அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்தும் தீர்வு கிடைக்காத நிலையில், இது தொடர்பாக ஜனாதிபதியின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். இனவாதத்தைக் களைந்து ஒரு தாய் பிள்ளைகளாய் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் முன் வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


No comments: